இரண்டு மாகாணசபைகளைக் கலைத்ததன் மூலம் இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு உதவிசெய்வதாக ஜே.வி.பி.யினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். மாகாணசபைகள் கலைக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றம் செல்லப்போவதாகவும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்கள் கலைக்கப்பட்டமையானது சட்டவிரோதமான நடவடிக்கை.
இதற்கு எதிராக சட்டநவடிக்கை எடுக்கவிருப்பதுடன், மக்களை ஒன்றுதிரட்டி போராட்டங்களை முன்னெடுக்கவிருப்பதாக இன்று செவ்வாய்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கூறினார்.
தற்பொழுது இரண்டு மாகாணசபைகளையும் கலைத்திருக்கும் அரசாங்கம் அங்கு தேர்தல்களை நடத்துவதாயின் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பாதுகாப்புத் தரப்பினரை அழைத்து தேர்தல் நடைபெறும் மாகாணங்களில் கடமையில் ஈடுபடுத்தவேண்டும்.
அவ்வாறான சந்தர்ப்பங்களில் கொழும்பு உட்பட ஏனைய பகுதிகளில் குண்டுத்தாக்குதல்களை நடத்தக்கூடிய அபாயம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார். மாகாணசபைகளைக் கலைத்தமைமூலம் அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவிசெய்யமுற்படுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
கிழக்கு மாகாணசபையை உருவாக்கி அங்கு அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்தியுள்ளது. அங்கு தேர்தலை நடத்துமாறு எவரும் கோரவில்லை. ஆனால் தேர்தலை நடத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டியிருப்பதாகக்கூறிக்கொண்டு கிழக்கில் முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் வன்முறைகளை அரசாங்கம் தூண்டியுள்ளது.
ஹிஸ்புல்லாவுக்கு முதலமைச்சர் பதவியை வழங்குவதாகக் கூறி முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றியிருக்கும் அரசாங்கம் இரண்டு சமூகங்களுக்கும் இடையில் வன்முறைகளை தூண்டிவிட்டிருப்பதாக விஜித ஹேரத் கூறினார்.
இந்தியாவின் விருப்பத்துக்கு அமையவே கிழக்கில் இந்த நிலையை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் இந்தியாவின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையிலேயே அமைந்துள்ளது என ஜே.வி.பி. மேலும் குற்றஞ்சாட்டியுள்ளது.
No comments:
Post a Comment