சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணசபைகளை ஆளும் கட்சி கலைத்திருப்பதான சட்டவிரோத நடவடிக்கை எனத் தெரிவித்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி, முடிந்தால் பாராளுமன்றத்தைக் கலைக்குமாறு சவால்விடுத்துள்ளது.
இரண்டு மாகாணசபைகளையும் கலைத்தமையானது அரசியலமைப்புக்கு முரணான செயலென இன்று செவ்வாய்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக கூறினார். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பது பற்றி ஆராயப்படுமென அவர் கூறினார்.
இரு மாகாணசபைகளும் கலைக்கப்பட்டமை தொடர்பாக இன்னும் ஓரிரு தினங்களில் கூடி ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர்.ஜெயலத் ஜெயவர்த்தனவின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு நீதிமன்றம் அரசாங்கத்துக்கு உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்புக் குறைக்கப்பட்டிருப்பதாகக் கோரி ஜெயவர்த்தன தாக்கல் செய்திருந்த மனுவை விவாசரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பானது இலங்கையில் நீதித்துறை இன்னமும் செயற்பட்டுக்கொண்டிருப்பதை உறுதிப்படுத்தியிருப்பதாக இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் கயந்த கருணாதிலக சுட்டிக்காட்டினார். இலங்கையில் 10 பாராளுமன்ற உறுப்பினருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பாராளுமன்றங்களுக்கு இடையிலான சபை தெரிவித்துள்ளது. இது இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் அச்சுறுத்தல் உள்ளது என்பதை சர்வதேசம் ஏற்றுக்கொண்டிருப்பதைப் புலப்படுத்துகிறது எனவும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment