மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் இன்று முற்பகல் முதல் மீண்டும் வன்முறை வெடித்து அங்கு கடும் பதற்றம் நிலவுகின்றது. இப்பதற்றத்தில் இதுவரை 25 பேர் வாள்வெட்டுக்காயங்களுக்கு இலக்காகி மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அப்பகுதியில் தற்போது சிறிலங்கா காவல்துறையினரின் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் முஸ்லிம்களுக்கும் பிள்ளையான் குழுவினருக்கும் இடையில் கடந்த வாரம் இடம்பெற்ற பதற்றத்தையடுத்து கடந்த ஞாயிற்றுகிழமை முஸ்லிம் வியாபாரி ஒருவர் கல்லடியில் வெட்டிக்கொல்லப்பட்டார்.
இச்சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து காத்தான்குடி முஸ்லிம்கள் கடந்த 4 நாட்களாக கடையடைப்பை மேற்கொண்டதுடன் காத்தான்குடி ஊடான தமிழ் மக்களின் போக்குவரத்தையும் தடை செய்து இருந்தனர்.
கடந்த 4 நாட்களுக்குப் பின்னர் இன்று வியாழக்கிழமை காலை முதல் மீண்டும் கடைகள் திறக்கப்பட்டு போக்குவரத்துக்கள் நடைபெற்றன.
இந்நிலையில் இன்று முற்பகல் 10:00 மணியளவில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் ஆரையம்பகுதி ஊடாகச் சென்ற முஸ்லிம்கள் இருவர் கடுமையான வாள்வெட்டுக்கு இலக்காகினர் என்ற செய்தி காலையில் பரவியது. ஆனால் அச்செய்தியில் உண்மை இல்லை என்று பின்னர் சிறிலங்கா அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
மேற்படி சம்பவம் குறித்து காத்தான்குடி எரிபொருள் நிலையத்தில் நின்ற தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே கருத்து முரண்பாடு தோன்றியது.
இதில் எரிபொருள் நிலையத்தில் நின்ற 5 தமிழர்கள் முஸ்லிம்களின் வாள்வெட்டுக்கு இலக்காகினர்.
இவர்கள் ஆரையம்பதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து காத்தான்குடி முஸ்லிம்கள் மீண்டும் கடைகளை மூடி, போக்குவரத்தை தடை செய்து காத்தான்குடி ஊடாகச் சென்ற தமிழ் மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தினர்.
இத்தாக்குதல்களின் போது 20 தமிழர்கள் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
காயமடைந்த 20 பேரும் காத்தான்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 8 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சை அளிக்கப்படுவதாக காத்தான்குடி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனைவிட போக்குவரத்தில் ஈடுபட்ட வாகனங்கள் மீது சரமாரியான கல்லெறி மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக காயமடைந்தவர்களை ஏற்றிச்சென்ற நோயாளர் காவு வாகனம் மீது சரமாரியான கல்லெறி நடத்தப்பட்டது.
இதனால் அந்த நோயாளர் காவு வாகனம் கடுமையாகச் சேதமடைந்ததுடன் அதில் இருந்தவர்களுக்கும் மேலதிக காயங்கள் ஏற்பட்டன.
தமிழ்ப் பகுதிகளுக்குச் செல்லும் பேருந்து ஒன்றும் தீயிடப்பட்டது. தமிழ் மக்களுக்குச் சொந்தமான கடைகளும் தாக்குதலுக்கு இலக்காகின. சில கடைகளுக்கு முன்பாக பொருட்கள் எரியூட்டப்பட்டுக் கிடந்தன.
இதனால் தொடர்ந்தும் அப்பகுதியில் கடும் பதற்றம் நிலவி வருகின்றது.
இப்பதற்ற நிலையை அடுத்து காத்தான்குடியில் இன்று முற்பகல் 11:00 மணிமுதல் மீண்டும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
படையினரும் காவல்துறையினரும் வீதிகளில் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
மே மாதம் 22 ஆம் திகதி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் அசம்பாவிதங்களால் தொடர்ச்சியாக அங்கு இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக அங்கு உணவுப் பொருட்களுக்குப் பாரிய தட்டுப்பாடு நிலவுவதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெயர்ந்து வாழ்கின்ற மக்களுக்கான மனிதாபிமானப் பணிகளை முன்னெடுப்பதிலும் பாரிய தடங்கல்கள் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனிதாபிமான ஒருங்கிணைப்பிற்கான அலுவலகத்தின் மட்டக்களப்பு கிளையின் தலைவர் தாண்டி வபே தெரிவித்துள்ளார்
puthinam.com

No comments:
Post a Comment