Thursday, 5 June 2008

கிழக்கில் ஜனநாயகத்தை ஏற்படுத்தியிருப்பதாக பொய் பிரசாரம்- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டுவிட்டு கிழக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்டியிருப்பதாக இலங்கை அரசாங்கம் பொய் பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் மூலம் கிழக்கில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டிருப்பதாக அரசாங்கம் கூறுகின்றபோதும், அங்கு வன்முறைகள் தூண்டிவிடப்பட்டு முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் வன்முறைகள் அதிகரிக்கப்பட்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் கூறினார்.
கடந்த மே மாதம் 10ஆம் திகதி இடம்பெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலை பகிஷ்கரிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விடுத்த வேண்டுகோளை தமிழ் மக்கள் நிறைவேற்றியுள்ளனர். திருகோணமலை உட்பட தமிழர்கள் செறிந்துவாழும் பகுதிகளில் தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்றார் அவர்.
இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்தைப் பிரகனடனப்படுத்தும் சர்வஜன வாக்கெடுப்பே கிழக்கு மாகாணசபைத் தேர்தல் என தேர்தலுக்குமுன்னர் முஸ்லிம் அமைச்சர்கள் கூறிவந்தனர். எனினும், இணைந்த வடக்கு, கிழக்கே சாத்தியம் என்பதை கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நன்கு வலியுறுத்தியுள்ளது எனப் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன், அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டபோது அவர் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாணத்தில் தற்பொழுது தமிழ், முஸ்லிம் இனங்களுக்கிடையில் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் மேலும் கூறினார்.

No comments: