Thursday, 5 June 2008

பொதுமன்னிப்புக்காலத்தில் சரணடையாதவர்களைக் கைதுசெய்ய நடவடிக்கை: இராணுவப் பேச்சாளர்

இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்கள் மீண்டும் திரும்புவதற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்புக்காலம் கடந்த மே மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ள நிலையில் தப்பியோடியவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையை இராணுவத்தினர் முன்னெடுக்கவுள்ளனர்.

பொதுமன்னிப்புக் காலத்தில் இதுவரை 4,800 பேர் மீண்டும் இணைந்திருப்பதாகப் பாதுகாப்புத் தரப்பு வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. “மே 16ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையான இரண்டாவது பொதுமன்னிப்புக் காலப் பகுதியில் இராணுவத்திலிருந்து தப்பியோடிய 1155 பேர் மீண்டும் திரும்பியுள்ளனர். இரண்டு பொதுமன்னிப்புக் காலப்பகுதியிலும் 4,864 பேர் மீண்டும் இணைந்துள்ளனர்” என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார தெரிவித்துள்ளார்.
பொதுமன்னிப்புக் காலத்தில் சரணடையாத இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கையில் இராணுவத்தினரும், பொலிஸாரும் இடுபட்டுள்ளனர். இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்கள் சரணடைவதற்கு கடந்த மே 1ஆம் திகதி முதல் 16ஆம் திகதிவரை பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுப் பின்னர் 31ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டிருந்தது.
தப்பியோடி பொதுமன்னிப்புக் காலத்தில் இணைந்துகொண்டவர்களை மீண்டும் பணியில் இணைத்துக்கொள்வதற்கான அனைத்து எழுத்துமூலமான நடவடிக்கைகளும் பூர்த்திசெய்யப்பட்டிருப்பதுடன், அவர்களை உரிய இடங்களில் பணிக்கு அமர்த்தும் பணிகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என பிரிகேடியர் தெரிவித்துள்ளார்.
இராணுவத்திலிருந்து 15,000 பேர் தப்பியோடியிருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 2007ஆம் ஆண்டு நவம்பர்மாதம் வழங்கப்பட்ட பொதுமன்னிப்புக் காலத்தில் 4 ஆயிரம் இராணுவத்தினர் சரணைடந்திருப்பதுடன், அவர்கள் தற்பொழுது மோதல்கள் இடம்பெறும் பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
வடக்கை முழுமையாக மீட்கப்போவதாக இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாகக் கூறிவரும் நிலையில் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்கள் மீண்டும் இணைந்துகொள்வதற்கு ஒரு மாதம் பொதுமன்னிப்புக் காலம வழங்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments: