Wednesday, 4 June 2008

ஜனாதிபதியின் லண்டன் வருகைக்கு எதிர்ப்பு

யூன் 10ல் கொமன்வெல்த் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ள ஜனாதிபதிக்கு எதிர்ப்புத் தெரிவிக்க பிரித்தானிய தமிழ் அமைப்பு அழைப்பு விடுத்து உள்ளது.

இக்கூட்டத்திற்கு முன்னதாக யூன் 9ல் 12 நாடுகளில் இருந்து கலந்து கொள்ளும் அரச தலைவர்களுக்கு விருந்துபசாரம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இம் மாநாட்டிலும் இவ்விருந்து உபசாரத்திலும் பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிறவுணும் கலந்து கொள்ள உள்ளார்.

மே 13ல் ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் உரையாற்றுவதற்கு ஜனாதிபதி வந்திருந்த போது எவ்வித எதிர்ப்பும் காட்டப்படவில்லை என்பதை தேசம்நெற் வருமாறு சுட்டிக்காட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.”பொதுவாக யுத்தக் கொடுமைகள்இ இன அழிப்புகள்இ மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் இவ்வாறு வரவேற்கப்படும் போது அதற்கு எதிரான அடையாள எதிர்ப்பு காட்டப்படுவது வழமை.

ஆனால் அரசியல் ரிதியாகவும் பலமாக உள்ள பிரித்தானிய தமிழ் சமூகம் இலங்கை அமைச்சர்கள் சர்வதேச அரங்கிற்கு வரும் போது பெரும்பாலும் அடையாள எதிர்ப்பை தெரிவிப்பதில்லை. சர்வதேச அரங்கிற்கு வரும் இலங்கை அரச பிரதிநிதிகள் எவ்வித எதிர்ப்பும் இடைஞ்சலும் இல்லாமல் வந்து போகக் கூடியதாக உள்ளது.”

பிரித்தானியாவில் அரசுக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பிரித்தானிய தமிழ் போறம் ஒக்ஸ்போர்டில் விட்ட தவறை மீண்டும் விடாமல் நடவடிக்கை எடுத்துள்ளது.

யூன் 10 மதியம் முதல் மாலை 3:00 மணிவரை மகிந்த ராஜபக்சவின் வரை கண்டிக்கும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். கொமன்வெல்த் செயலாளர் அலுவலகத்திற்கு முன் (Commonwealth Secretariat, Marlborough House, Pall Mall, London SW1Y 5HX) அவர்கள் தம் எதிர்ப்பைத் தெரிவிக்க உள்ளனர்.

ஜனாதிபதி மகிந்தவின் தற்போதைய ஆட்சியில் இன மத பேதங்களுக்கு அப்பால் சகல மக்களுமே மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளனர்.

வாழ்க்கைச் செலவு ரொக்கற் வேகத்தில் அதிகரித்து உள்ளது. தமிழ் முஸ்லீம் மக்களைப் பொறுத்தவரை இவற்றுக்கு மேலாக இன ரிதியான ஒடுக்கு முறைக்கு உள்ளாகி உள்ளனர்.

இவர்கள் மனித நேயத்திற்கு எதிரான உரிமை மீறல்களுக்கும் வதைகளுக்கும் ஆளாகின்றனர். நாடு முழுவதும் குறிப்பாக வடக்கில் தமிழ் மக்கள் யுத்த தாக்குதலுக்கும் ஆளாகின்றனர்.

இலங்கை அரசுக்கு எதிரான எதிர்ப்பு உணர்வு அனைத்து மக்களிடமும் இருந்தாலும் அவர்கள் இனரீதியாக பிளவுபட்டு உள்ளதால் அரசு அவ்வெதிர்ப்பு உணர்வு முழுமையாக தன்னை மையங் கொள்ளவிடாமல் தடுத்து வருகிறது. அனைத்து மக்களும் இணைந்து அரசுக்கு எதிராக குரல் எழுப்புவதற்கான தளம் புலம்பெயர் தேசத்திலும் இல்லை.

No comments: