Tuesday, 3 June 2008

கடந்த 3 மணித்தியாலங்களில் 200 தமிழ்க் குடும்பங்கள் காத்தான்குடிப் பிரதேசத்திலிருந்து வெளியேறியுள்ளனர்

காத்தான்குடிப் பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்றநிலையைத் தொடர்ந்து 200 தமிழ்க் குடும்பங்கள் பிரதேசத்தை விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரியவருகிறது. காத்தான்குடி எல்லைக் கிராமமான மஞ்சந்தொடுவாய்ப் பிரதேசத்தைச் சேர்ந்த 200 தமிழ்க் குடும்பங்களே இவ்வாறு வெளியேறியுள்ளதாகத் தெரியவருகிறது.

காத்தான்குடிப் பிரதேசத்தில் பதற்றநிலைமை நீடித்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு மாகாணசபையின் முதலாவது அமர்வு நாளை மறுதினம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் கிழக்கில் மீண்டும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

மட்டக்களப்பு கல்லடிப் பிரதேசத்தில் இளநீர் விற்பனையில் ஈடுபட்டிருந்த இரண்டு முஸ்லிம்கள் கடத்தப்பட்டதனைத் தொடர்ந்து மீண்டும் பதற்றநிலை உருவாகியுள்ளது.

இனந்தெரியாத நபர்களினால் குறித்த இரண்டு முஸ்லிம்களும் கடத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சுமார் 5000 த்திற்கும் மேற்பட்டோர் காத்தான்குடியில் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரியவருகிறது.

முஸ்லிம்கள் துன்புறுத்தப்படுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாதென்ற கிழக்கு மாகாண முதலைமைச்சர் பிள்ளையானின் உறுதி மொழி பொய்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் காத்தான்குடி முஸ்லிம்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

காத்தான்குடி நகரில் டயர்கள் எரிக்கப்பட்டும் வாகனப் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கப்பட்டும் பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரியவருகிறது.

நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடத்தப்பட்டவர்கள் பொலிஸாரின் தலையீட்டினால் விடுவிக்கப்பட்டதாகத் தெரியவருகிறது.

முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்படும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கிழக்கு மாகாணசபைக்குத் தெரிவான 17 முஸ்லிம் உறுப்பினர்களும் அமர்வுகளைப் பகிஷ்கரிக்க வேண்டும் எனக் கோரப்பட்டடுள்ளது.

No comments: