Tuesday, 3 June 2008

சார்க் உணவு வங்கி விரைவில் இயங்கவுள்ளது

சார்க் அங்கத்துவ நாடுகளின் அங்கீகாரத்துடன் 'சார்க் உணவு வங்கி' விரைவில் இயங்கவுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் எட்டு நாடுகளில் பங்களாதேஷ், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நான்கு நாடுகளும் இந்த நடவடிக்கைக்கு அங்கீகாரமளித்துள்ளன.

அதேவேளை, மாலைதீவு, பூட்டான், நேபாளம், ஆப்கானிஸ்தான் ஆகிய ஏனைய உறுப்புநாடுகளின் அங்கீகாரத்திற்கு காத்திருப்பதாகவும், உணவு வங்கி ஸ்தாபிக்கும் பிரகடனத்திற்கு அவை அங்கீகாரம் வழங்கியதுடன் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வருமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

2007 ஏப்ரல் 3ஆம் திகதி இந்தியாவில் கடைசியாக இடம்பெற்ற சார்க் உச்சி மாநாட்டில் சார்க் உணவு வங்கியை உருவாக்குவதற்கான பிரகடனம் மேற்கொள்ளப்பட்டது. ஆரம்பத்தில் சார்க் உணவு கையிருப்பை மேற்கொள்வதென்ற திட்டம் முன்வைக்கப்பட்டது. பின்னர் உலகளாவிய உணவு நெருக்கடியை கருத்திற்கொண்டு "சார்க் உணவு வங்கி'யை அமைப்பதென தீர்மானிக்கப்பட்டது.

2 மில்லியன் தொன் அரிசி, கோதுமை கையிருப்புடன் இந்த உணவு வங்கி ஆரம்பிக்கப்படுமென இராஜதந்திர வட்டாரமொன்று தெரிவித்துள்ளது. இந்த உணவுப் பொருள் கையிருப்புக்கு அங்கத்துவ நாடுகளும் பங்களிப்பை வழங்கும்.

உறுப்பு நாடுகளில் 'சார்க் உணவு வங்கி' என்ற பெயரில் இந்தக் கையிருப்புகள் சேகரித்து வைக்கப்படும்.

சார்க் அங்கத்துவ நாடொன்று உணவு நெருக்கடியை எதிர்கொள்ளும்போது அவசர நிலைமையை சமாளிக்க இந்த உணவு வங்கியிலிருந்து பொருட்கள் பெற்றுக்கொள்ளப்படும். குறிப்பிட்ட நாடொன்றின் உணவு வங்கியிலுள்ள உணவுப்பொருள் போதாமலிருந்தால் சார்க் உறுப்பினராகவுள்ள அயல் நாடொன்றிலிருந்து கடனாக உணவுப் பொருள் பெற்றுக்கொள்ளப்படும். நெருக்கடி முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின் கடனாகப் பெற்ற உணவுப் பொருளை அந்தக் குறிப்பிட்ட நாட்டின் உணவு வங்கிக்கு திருப்பிச் செலுத்திவிட வேண்டும் எனவும் இந்த நாடுகள் இணக்கம் கண்டிருக்கின்றன.

1 comment:

ttpian said...

it is very very simple-India going utilise this trap to control SAARC countries:On the other hand,India will import foodgrains from other countries at higher rate!