Tuesday, 3 June 2008

(5th lead)வெள்ளவத்தையில் குண்டு வெப்பு-19 பேர் காயம்



கொழும்பின் புறநகர்ப் பகுதியான தெகிவளையில் இன்று காலை இடம்பெற்ற பாரிய குண்டு வெடிப்புச் சம்பவத்தினால் தொடரூந்துப் பாதை சிதைக்கப்பட்டுள்ள அதேவேளையில் இச்சம்பவத்தில் இருபது பேர் வரையில் படுகாயம் அடைந்திருக்கின்றார்கள். இச்சம்பவத்தையடுத்து கொழும்பிலிருந்து தென்பகுதிக்கான கரையோர தொடரூந்துச் சேவையும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால் அலுவலக ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தெகிவளைக்கும் வெள்ளவத்தைக்கும் இடைப்பட்ட தொடரூந்துப் பாதையில் வாசல வீதிக்கு அருகாமையிலேயே இன்று காலை 7.10 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. பாரிய குண்டு வெடிப்பினால் வெள்ளவத்தை மற்றும் தெகிவளைப் பகுதிகள் அதிர்ந்த அதேவேளையில் இப்பகுதியில் மக்கள் மத்தியில் பெரும் அச்சநிலையும் ஏற்பட்டது. காலை அலுவலக தொடரூந்துச் சேவைகள் அனைத்தும் இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவத்தினால் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.



இந்த ரயில்வே பாதை படையினராலும், காவல்துறையினராலும் தினசரி பல தடவைகள் சோதனையிடப்படுகின்ற போதிலும் இன்று காலை குண்டு வெடிப்பதற்கு சற்று முன்னர்தான் அப்பகுதியில் குண்டு வைக்கப்பட்டிருக்க வேண்டும் என காவல்துறையினர் கருதுகின்றார்கள். சம்பவம் இடம்பெற்ற போது தொடரூந்துகள் எதுவும் அந்தப் பகுதிக்கு வராமையால் பாரிய இழப்புக்கள் தவிர்க்கப்பட்டிருக்கின்றது. அப்பகுதியில் நடமாடியவர்களே காயமடைந்திருக்கின்றார்கள்.

சம்பவம் இடம்பெற்ற உடனடியாக பெருந்தொகையான படையினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்தைச் சூழ்ந்துகொண்டனர். குறிப்பிட்ட பகுதியில் படையினர் சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பெருந்தொகையான அம்புலன்ஸ் வண்டிகள் சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்தவர்களை ஏற்றிச் சென்ற அதேவேளையில் தீயணைக்கும் படையினரும் அப்பகுதிக்கு விரைந்துள்ளார்கள். காயமடைந்த சுமார் 20 பேர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளையில், பாணந்துறையிலிருந்து கொழும்பு செல்லும் தொடரூந்தை இலக்கு வைத்தே தெகிவளையில் இந்தக் குண்டு வைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இருந்தபோதிலும் பொது மக்கள் அவதானமாக இருந்தமையால் பாரிய அனர்த்தம் ஒன்று தவிர்க்கப்பட்டதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
சந்தேகத்துக்கு இடமான ஒருவர் இன்று காலை இப்பகுதியில் நடமாடியதாகவும், பாணந்துறையிலிருந்து வரும் தொடரூந்து அப்பகுதியைத் தாண்டிச் சென்ற போது குண்டு வீசும் நோக்கத்துடன் குண்டுதாரி முன்னேறிச் சென்றதாகவும் சொல்லப்படுகின்றது. அந்தவேளையில் பொதுமக்கள் சத்தமிட்டதால் அவரது முயற்சி வெற்றிபெறவில்லையாம்.

இதனைத் தொடர்ந்து அவர் குண்டை தொடரூந்துச் சாலையை நோக்கி எறிந்துவிட்டுத் தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறு எறியும் போது குறிப்பிட்ட தொடரூந்து அப்பகுதியைத் தாண்டிச் சென்றுவிட்டது. இதனால் அப்பகுதியில் நின்றவர்களே காயமடைந்திருக்கின்றார்கள். குண்டுதாரி தப்பிச் சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாணந்துறையிலிருந்து கொழும்புவரும் காலைத் தொடரூந்துகள் பெருந்தொகையான அலுவலக ஊழியர்களை ஏற்றிவருவது வழமையாக இருப்பதால் குண்டு இலக்கைத் தாக்கியிருந்தால் பெருந்தொகையானவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

source:ajeevan.ch


No comments: