Monday, 9 June 2008

மனோ கணேசனின் அறிக்கை தமிழ் மக்கள் மத்தியில் தேவையற்ற பயத்தைத் தோற்றுவித்துள்ளது: ஜனாதிபதி செயலகம்

வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ் மக்கள் கொழும்பிலிருந்து அப்பால் தங்கியிருக்குமாறு மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் விடுத்த அறிக்கையானது, தமிழ் மக்கள் மத்தியில் தேவையற்ற பயத்தைத் தோற்றுவித்திருப்பதாக ஜனாதிபதி செயலகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

“இந்த அறிக்கையானது அடிப்படையற்றது. வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் தேவையற்ற பயத்தைத் இது தோற்றுவித்திருப்பதுடன், இலங்கை தொடர்பாக வெளிநாடுகளில் அபகீர்த்தியை ஏற்படுத்தும் செயலாக அமைந்துள்ளது” என மனோ கணேசனின் அறிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மனோகணேசனின் அறிக்கைப்படி விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்படும் தாக்குதல்களுக்கு வடக்கு, கிழக்கிலிருந்து வரும் அனைத்துத் தமிழ் மக்கள் மீதும் சந்தேகம் ஏற்படும் என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லையென ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.


விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் கொடூரமான தாக்குதல்களை நடத்திவருகிறார்கள் என்பதற்கு சான்றுகள் காணப்படுகின்றன. அத்துடன், தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அப்பாலிருக்கும் மக்கள்மத்தியில் பகையுணர்ச்சி ஏற்படவேண்டும் என்பதற்காக பொதுமக்கள் போக்குவரத்துச் சாதனங்களில் குண்டுத்தாக்குதல்களை நடத்தி அப்பாவிப் பொதுமக்களை விடுதலைப் புலிகள் கொன்றுவருகின்றனர்.


இவ்வாறான தாக்குதல்களால் தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறைகள் ஏற்படாதவாறு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என்றும் ஜனாதிபதி செயலகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்க ஊடகங்கள் வெறுக்கத்தக்கவகையில் பிரசாரங்களை முன்னெடுத்துவருகிறது. சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுபவர்களதும் பாதுகாப்பு தரப்பினர்களதும் செயற்பாடுகள் இனரீதியாகவே உள்ளன என்று மற்றுமொரு அடிப்படையற்ற குற்றச்சாட்டை மனோகணேசன் முன்வைத்திருப்பதாகவும் ஜனாதிபதி செயலகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டானது உண்மைக்குப் புறம்பானது. விடுதலைப் புலிகளால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் கொடூரமான தாக்குதல்களுக்கு மீண்டும்மீண்டும் இடமளிக்கவேண்டாம் என மக்களைக் கோரும்நோக்கிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய அரசாங்க ஊடகங்கள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் கொடுமையான தாக்குதல்களால் மக்கள் கலவரமடைவதைத் தணிக்கும் முக்கிய பணியில் இந்த நிறுவனங்கள் செயற்பட்டுவருகின்றன. விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்படுபவர்கள் சட்டத்துக்கு அமையவே கைதுசெய்யப்படுகின்றனர் எனவும், கடத்தல்கள் கைதுகள் தொடர்பாக அறிந்துகொள்வதற்கு மனித உரிமைகள் அமைச்சு உதவிப் பிரிவொன்றை ஏற்படுத்தியிருப்பதாகவும் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

No comments: