இராணுவச் சிப்பாய் ஒருவர் வெளிநோயாளர் பிரிவுக்குள் ஆயுதங்களுடன் நுழைந்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மன்னார் பொது வைத்தியசாலையில் அடையாளப் பணிப்புறக்கணிப்புப் போராட்டமொன்று நடத்தப்பட்டது.
இன்று திங்கட்கிழமை அதிகாலை 4 மணியளவில் மன்னார் பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் பெண்கள் பகுதிக்குள் இராணுவச் சிப்பாய் ஒருவர் ஆயுதத்துடன் அத்துமீறி நுழைந்துள்ளார்.
இந்த நடவடிக்கையானது வைத்தியசாலைப் பணியாளர்களை மன உழைச்சலுக்கு உள்ளாக்கியிருப்பதுடன், அச்சமடையச்செய்திருப்பதாகவும் கூறி மன்னார் பொது வைத்தியசாலையின் பணியாளர்கள், வைத்தியர்கள் உட்பட அனைவரும் இன்று திங்கட்கிழமை காலை 8 மணிமுதல் அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
இந்தப் பணிப்புறக்கணிப்புத் தொடர்பாக அறிந்துகொண்டு அங்கு சென்ற மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியேட்சகர், தள்ளாடி இராணுவ முகாம் தளபதி, மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி உட்பட்ட முக்கியஸ்தர்கள் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இராணுவச் சிப்பாயின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது எனவும், அவ்வாறு ஆயுதத்துடன் உள்நுழைந்த இராணுவச்சிப்பாய்மீது விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தள்ளாடி இராணுவ முகாம் தளபதி தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறாமல் பார்த்துக்கொள்வதாகவும், ஆயுதங்களுடன் வைத்தியசாலைக்குள் நுழைவது இடம்பெறாது எனவும் இன்றைய பேச்சுவார்த்தையில் உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியேட்சர்கள், இராணுவத் தளபதி, வைத்திய சுகாதார அதிகாரி ஆகியோரின் உறுதிமொழியைத் தொடர்ந்து மன்னார் பொது வைத்தியசாலையின் பணியாளர்கள் தமது ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டு சேவைக்குத் திரும்பினர்.
இதேவேளை, மன்னார் அடம்பன் உள்ளகப் பகுதிகளில் விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மோதல் சம்பவத்தில் காயமடைந்த இரண்டு இராணுவத்தினர் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த இராணுவத்தினர் வைத்தியசாலைக்கு அழைத்துவரப்படுவதால் மன்னார் பொது வைத்தியசாலையின் வெளிவளாகத்தில் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment