பேரூந்துகள், புகையிரதங்களில் இடம்பெறும் குண்டுத் தாக்குதல்களை நிறுத்தி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கைவிடுத்துள்ளது.
“கட்டுபொத்தவில் பேரூந்தை இலக்குவைத்து நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் 20ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டு 50ற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்” என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
ஆயுத மோதல்களுடன் தொடர்புபடாத அப்பாவிப் பொதுமக்களை இலக்குவைத்து நடத்தும் தாக்குதல்கள் அண்மைக்காலத்தில் அதிகரித்துள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பை அரசாங்கத்தால் உறுதிப்படுத்தமுடியாதுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் கூறிவருவதை இந்தத் தொடர் தாக்குதல்கள் எடுத்துக்காட்டுகின்றன. அனுதாபச் செய்திகளை வெளியிடுவதுடன் மாத்திரம் அரசாங்கம் திருப்தியடைகின்றது என்பதையே நாங்கள் தற்பொழுது காணக்கூடியதாக உள்ளது.
இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வே ஒரே வழியெனக் கூறி அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளால் மக்களைப் பாதுகாக்க அரசாங்கம் தவறிவிட்டது என ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
இதேவேளை, நாட்டுமக்கள் எந்தவிதமான வன்முறைகளிலும் ஈடுபடாமல் அமைதிகாக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். மக்கள் விழிப்பாக இருப்பதுடன், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு பொலிஸாருக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment