மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட அலவக்கை பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை 7.30 மணியளவில் குளத்துக்குக் குளிக்கச்சென்ற இவர் இன்று சடலமாக மீட்கப்பட்டதாக முருங்கன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஐந்து பிள்ளைகளின் தந்தையான நடராஜா ஜெயராயன் (36) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குளத்துக்குக் குளிக்கச்சென்றிருந்தவேளை இனந்தெரியாத ஆயுததாரிகள் அவர்மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டிருப்பதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலத்தைச் சென்றுபார்வையிட்ட மன்னார் மாவட்ட பதில் நீதவான் ஈ.ஹயஸ் சல்டானோ பிரேதப்பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சடலம் பிற்பகல் 3.30 மணியளவில் மன்னார் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, மன்னார் வான்பரப்பில் இன்று விமானப்படையினரின் உலங்குவானூர்திகள் தாழப்பறந்ததாக மன்னார் செய்திகள் தெரிவிக்கின்றன. பல தடவைகள் இவ்வாறு உலங்குவானூர்திகள் பறந்ததாகக் கூறப்படுகிறது.
இதுஇவ்விதமிருக்க, மன்னாரிலிருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் மதவாச்சி ஊடாக செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லையெனத் தெரியவருகிறது. மன்னார் மற்றும் வவுனியாவிலிருந்து வெளிமாட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் மதவாச்சியில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் அங்கிருந்து வேறு பேரூந்துகளிலேயே தென்பகுதிக்கு அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், இன்று மன்னாரிலிருந்து மதவாச்சிக்கு வந்தவர்கள் பேரூந்துகளில் செல்ல அனுமதிக்கப்படவில்லையெனவும், புகைவண்டிகளில் மாத்திரமே செல்லமுடியுமென பாதுகாப்புத் தரப்பினர் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment