Wednesday, 4 June 2008

எழுதுமட்டுவாள் சிறிலங்காப் படைத்தளம்- எறிகணைத்தளம் மீது விடுதலைப் புலிகள் எறிகணைத் தாக்குதல் வெடிபொருட் களஞ்சியம் தீப்பற்றி வெடித்துச் சிதறி எரிந்தது

யாழ். தென்மராட்சி எழுதுமட்டுவாள் சிறிலங்காப் படைத்தளம் மற்றும் எறிகணை ஏவுதளம் ஆகியவற்றின் மீது இன்று இலக்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில் பேரழிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது:

முகமாலைக் களத்தின் முதன்மைப் பின்தளமாக உள்ள எழுதுமட்டுவாள் சிறிலங்காப் படைத்தளம் மற்றும் மோட்டார் எறிகணைகளை ஏவும் தளம் ஆகியன மீது இன்று புதன்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது.

அத்தளங்களின் மீது குறிவைத்து செறிவாக புலிகள் இத்தாக்குதலை நடத்தினர்.

சிறிலங்காவின் படைத்தளம், மோட்டார் எறிகணை ஏவுதளம் மற்றும் வெடிபொருட் களஞ்சியம் ஆகியவற்றில் எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன.

2 மணிநேரம் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் வெடிபொருட் களஞ்சியம் தீப்பற்றி வெடித்துச் சிதறி எரிந்தது. இன்று பிற்பகல் வரை வெடிபொருட்கள் வெடித்து எரிந்தன.

படைத்தளத்தில் இருந்த பெருமளவிலான படையினர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது.

பாரிய படை நடவடிக்கை ஒன்றுக்கான தயாரிப்பில் படையினர் ஈடுபட்டுக்கொண்டிந்த நிலையில் இந்த செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளோம் என்றார் இளந்திரையன்.

puthinam.com

No comments: