இராணுவப் படையினர் பல்வேறு இக்கட்டான சூழ்நிலையை எதிர்நோக்கிய சந்தர்ப்பங்களில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நாட்டைவிட்டுத் தப்பியோடியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கோத்தபாய எமது அரசாங்க காலத்தில் இராணுவத்தை விட்டு விலகி அமெரிக்காவில் குடியேறுவதற்கு அனுமதியளிக்குமாறு கோரியிருந்தார் எனவும் இது தொடர்பாக ரஞ்சன் விஜேரட்ன தமக்கு அறிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் கோத்தபாய தமது படையணியை நிர்க்கதியான நிலையில் தவிக்கவிட்டு அமெரிக்காவிற்குத் தப்பிச் சென்றார் என ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ கிழக்கை மீட்டெடுத்த போது கோத்தபாய நாட்டிலிருக்கவில்லை. சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வடக்கில் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்தபோது கோத்தபாய நாட்டைவிட்டு வெளியேறியிருந்தார் எனவும் படையினர் உயிர்த் தியாகங்களை மேற்கொள்ளச் சிலர் பதவி உயர்வுகளைப் பெற்றுக் கொண்டனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்காகப் போராடிய அரசியல்வாதிகள் இன்று கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இராணுவம் இக்கட்டான நெருக்கடிகளைச் சந்தித்த வேளையில் நாட்டைவிட்டு அமெரிக்காவிற்கு தப்பியோடியவர்களை வேண்டுமானால் தேசத்துரோகிகள் எனக் குறிப்பிட முடியும்.
கிழக்கு மாகாணசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்து கொண்ட போது எதிர்க்கட்சித் தலைவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

No comments:
Post a Comment