Tuesday, 10 June 2008

அரசை அமைக்கும் தகுதி எமக்கு உள்ளது: ஜே.வி.பி

 ஜே.வி.பி.யில் ஏற்பட்ட உட்கட்சிப் பிரச்சினைகளால் அக்கட்சி பிளவுபட்டுள்ள போதிலும், நாட்டில் அரசாங்கத்தை அமைக்கக்கூடிய தகமை தமக்கு இருப்பதாக அக்கட்சி தெரிவித்திருக்கின்றது.


கடந்த அறுபது வருட காலமாக நடைமுறையிலிருந்தும் அரசியலால் தாம் எதனையும் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதை நாட்டு மக்கள் இப்போது நன்கு உணர்ந்து கொண்டுள்ளார்கள் எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.


அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை இப்போது ஜே.வி.பி. தீவிரப்படுத்தியுள்ள நிலைமையில், 2005 ஆம் ஆண்டு அரசுத் தலைவருக்கான தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை ஆதரித்தமை தவறானது என ஜே.வி.பி. இப்போது கருதுகின்றதா எனக் கேட்கப்பட்ட போதே அக்கட்சியின் புதிய பிரச்சாரச் செயலாளர் அநுர குமாரதிசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.


"அந்த நேரத்தில் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதைவிட எமக்கு மாற்று வழி இருக்கவில்லை" எனவும் அவர் குறிப்பிட்டார்.


"அந்த வேளையில் எமக்கு போதுமானளவு வாக்குப் பலம் இருக்கவில்லை என்பதால் ஜே.வி.பி. உறுப்பினர் ஒருவரை அரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் களத்தில் இறக்குவது பொருத்தமானதாக இருக்கவில்லை.


அந்த வேளையில் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பது கூட பொருத்தமான ஒரு நடவடிக்கையாக இருக்கவில்லை என்கின்ற போதிலும், ரணில் விக்கிரமசிங்க அரசுத் தலைவராக வருவதைவிட அது பரவாயில்லை என்ற நிலைமையிலேயே அந்த முடிவை எடுத்தோம்" எனவும் அநுரா குமார திசாநாயக்க தெரிவித்தார்.

"கடந்த அறுபது வருட காலமாக இந்நாட்டில் நடைமுறையிலிருக்கும் இந்த பழைய அரசியல் முறையின் மூலமாக எந்தவிதமான நலன்களையும் பெற்றுக்கொள்ள முடியாது என்பதை இந்தநாட்டு மக்கள் இப்போது உணர்ந்துகொண்டுள்ளார்கள்.


எம்முடைய கட்சி சமாதானம், பொருளாதார அபிவிருத்தி, சமூக அபிவிருத்தி என்பவற்றை மட்டும் கொண்டுவர விரும்பவில்லை, அன்பு மற்றும் நீண்டகாலமாக நாம் இழந்துவிட்ட ஒழுக்கங்களையும் மீண்டும் கொண்டுவரும். ஐ.தே.க. மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் திட்டங்களால் மக்கள் விரக்தியடைந்த நிலையில் இருக்கின்றார்கள்" எனவும் அவர் தெரிவித்தார்.

No comments: