Tuesday, 10 June 2008

கழிவு எண்ணெய் ஊற்றி, கல்லெறிந்து ஜே.வி.பி.யினர் மீது தாக்குதல்; சிலர் காயம்

சிலாபம் ஆராச்சிக்கட்டுப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை ஜே.வி.பி.யினர் நடத்திய ஆர்ப்பாட்டம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதில் சிலர் காயமடைந்துள்ளனர்.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, எரிபொருள் விலையேற்றம் மற்றும் ஊழல் மோசடிகளைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை காலை ஆராய்ச்சிக்கட்டு நகரில் ஜே.வி.பி. ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது.

இதன் போது அங்கு வந்த அரச ஆதரவாளர்கள் நடத்திய மிக மோசமான தாக்குதலில் ஜே.வி.பி. மாகாண சபை உறுப்பினர் ஒருவர் உட்பட 11 பேர் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

அரசின் இந்த அராஜகத்தைக் கண்டித்து நேற்றுக் காலை ஜே.வி.பி.யினர் ஆராச்சிக்கட்டு நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜே.வி.பி.யின் அநுராதபுர மாவட்ட எம்.பி. லால்காந்த தலைமையில் நேற்று இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அங்கு வந்த ஒரு கோஷ்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

கழிவு எண்ணெய்களை ஊற்றியும் கற்களை வீசியும் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இதில் ஜே.வி.பி. உறுப்பினர்கள் சிலர் காயமடைந்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற போது அப்பகுதியில் பொலிஸார் கடமையிலிருந்த போதும் அவர்கள் எதுவும் செய்யவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments: