ஜீ.எஸ்.பீ. சலுகை இல்லாமல் செயற்பட முடியும் என அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் குறிப்பிடுவதாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் தம்மிடம் தெரிவித்தாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான கூற்றுக்களை வெளியிடாது வாயை மூடிக் கொண்டு ஜீ.எஸ்.பீ. பிளஸ் சலுகையை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜீ.எஸ்.பீ. சலுகையை பெற்றுக் கொள்வது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவருக்கும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுக்கும் இடம் பெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் வகையில் இன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
2005 ஆண்டு விதிக்கப்பட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் ஜீ.எஸ்.பீ பிளஸ் சலுகை வழங்கப்படும் எனவும், இவ்வாறான 27 சர்வதேச நிபந்தனைகள் மற்றும் ஒப்பந்தங்கள் காணப்படுவதாகவும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பாக பல்வேறு சிக்கல்கள் நிலவுவதாகவும், உரிய நிபந்தனைகள் பின்பற்றப்படாவிட்டால் சலுகைகள் வழங்க முடியாத நிலை உருவாகும் என அவர்கள் சுட்டிக்காட்டியதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜீ.எஸ்.பீ பிளஸ் சலுகையை பெற்றுக் கொள்வதற்காக இலங்கை இன்னமும் விண்ணப்பம் ஒன்றையேனும் அனுப்பி வைக்கவில்லை என ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக ஒக்ரோபர் மாதம் விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் சர்ச்சைகள் நிலவும் நாடுகளில் அதற்கு முன்னர் விண்ணப்பிக்கப்படுவதே வழமையான நடைமுறை என ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் குறித்த சர்வதேச நியதிகள் பற்றி கவனம் செலுத்துவதன் மூலம் கடந்த கலங்களில் அரசாங்கம் விட்ட பிழைகளைத் திருத்திக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு ஐக்கிய தேசியக் கட்சி பூரண ஒத்துழைப்பு வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜீ.எஸ்.பீ பிளஸ் சலுகையை தக்க வைத்துக் கொள்வதன் மூலம் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரின் தொழில் வாய்ப்புக்களை பாதுகாக்க முடியும் எனவும், இதற்காக எவ்வாறான நடவடிக்கையையும் எடுக்க ஐக்கிய தேசியக் கட்சி பின்நிற்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Wednesday, 4 June 2008
அரசாங்கம் வாயை மூடிக் கொள்ள வேண்டும் - ரணில் விக்ரமசிங்க
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment