Tuesday, 10 June 2008

கட்சியை உடைக்கும் அரசாங்கத்தின் முயற்சி பயனளிக்காது- ஐக்கிய தேசியக் கட்சி

ஐக்கிய தேசியக் கட்சியை மேலும் உடைப்பதற்கு முயற்சிக்கும் அரசாங்கத்தின் முயற்சி ஒருபோதும் பயனளிக்காது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து சிலரைப் பிரித்து அரசாங்கத்துடன் இணைத்துக்கொண்ட ஆளும் கட்சி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஜே.வி.பி. போன்ற கட்சிகளையும் உடைத்திருப்பதாகக் குற்றஞ்சாட்டியிருக்கும் அவர், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கான தற்காலிக நடவடிக்கையே எனக் கூறியுள்ளார்.


எனினும், கட்சியை மேலும் உடைப்பதற்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை பலனளிக்காது. எந்தவொரு உறுப்பினரும் அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளவிரும்பவில்லை என இன்று திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் லக்ஷ்மன் கிரியல்ல குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மோதல்களை நிறுத்தி சமாதானத்தை நிலைநாட்டவேண்டுமெனவே நாங்கள் தொடர்ந்தும் கோரிக்கை விடுக்கின்றோம். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில் வெளிநாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டு வருவதாக அரசாங்கம் பொய் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது என அவர் கூறினார்.


குறிப்பாக ஆடை ஏற்றுமதி வரிச்சலுகையை (ஜீ.எஸ்.பி.+)ஐ நிறுத்துவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் வெளிநாடுகளுக்குச் சென்று பேச்சுவார்த்தைகளை நடத்துவதாகக் கூறி இங்கு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன.


எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஒருகாலமும் அவ்வாறான செய்பாடுகளில் ஈடுபடமாட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்திலேயே 500 கைத்தொழில் நிறுவனங்கள் அமைக்கப்பட்டு ஆடை ஏற்றுமதி வரிச்சலுகை பெற்றுக்கொடுக்கப்பட்டது.


தற்பொழுது பெரும்பாலான நிறுவனங்கள் மூடப்பட்டு, வரிச்சலுகையை இழக்கும்நிலை தோன்றியுள்ளது. இது எமக்கு வேதனையையே தோற்றுவித்துள்ளது. இதனால் ஏற்றுமதி வரிச்சலுகையை மீளப்பெற்றுக்கொடுக்கும் முயற்சியிலேயே ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டிருப்பதாக இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் லக்ஷ்மன் கிரியல்ல குறிப்பிட்டார்.

அத்துடன், கடந்த மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தை ஒத்திவைத்ததால் பாராளுமன்றத் தெரிவுக்குழுக்களை நியமிக்குமாறு விடுத்த வேண்டுகோள்கள் காலவதியாகியிருப்பதாக அவர் கூறினார்.


மிக் விமானக் கொள்வனவில் இடம்பெற்ற மோசடி மற்றும் விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கியமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரரணைகளை மேற்கொள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்படவேண்டுமெனத் தாம் கோரிக்கை விடுத்திருந்ததாகவும், பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதால் அந்தக் கோரிக்கைகளை மீண்டும் முன்வைக்கவிருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல மேலும் கூறினார்.

No comments: