பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்காது அரசாங்கத்தின் வங்கரோத்து நிலையை வெளிக்காட்டும் விதமாக நாளை மற்றும் நாளை மறுதினம் பாடசாலைகளை மூடுவதற்கு அராசங்கம் தீர்மானித்துள்ளதாக ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
ஆசிரிய, அதிபர் தரங்களில் சம்பள முரண்பாடுகள் காணப்படுவதாக ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் எடுத்தத் தீர்மானத்தை வன்மையாகக் கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளது.
சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வுப் பெற்றுக் கொடுப்பதற்கு பதிலாக அரசாங்கம் காலம் தாழ்த்தி வருவதாக தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இலங்கை ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்க பிரதிநிதிகள், கல்வி அமைச்சர், திறைசேரியின் செயலாளர் ஆகியோருக்கு இடையில் இன்று முற்பகல் 10.00 அளவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
எவ்வாறெனினும், வழமை போன்று அரசாங்கம் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்காது ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் தீர்வுப் பெற்றுத் தருவதாக குறிப்பிட்டதாக ஆசிரியர் தொழிற்சங்க செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கும் வரை தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும், கோழைத் தனமாக அரசாங்கம் பாடசாலைகளை மூடியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment