Wednesday, 11 June 2008

இலங்கையை சர்வதேசம் மறந்து விடவில்லை இதைக் கொழும்பு புரிந்து கொள்ள வேண்டும்--சர்வதேச மன்னிப்புச் சபை


சர்வதேசச் சமூகம் இலங்கையை இன்னமும் மறந்துவிடவில்லை என்பதை இலங்கை அரசு புரிந்து கொள்ள வேண்டுமெனச் சர்வதேச மன்னிப்புச் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து லண்டனில்

பொதுநலவாய செயலகத்தின் முன்னால் திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது சர்வதேச மன்னிப்புச் சபையின் தென்னாசியாவிற்கான இயக்குநர் சாம் ஜரிவி இந்த வேண்டுகோளை விடுத்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லண்டனில் பொதுநலவாயத் தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொண்டுள்ள வேளை இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் நிலைமை மிக வேகமாக மோசமடைவதால் அந்த நாட்டின் போக்கு உலகின் கவனத்திற்குரிய விடயமாக மாறியுள்ளது என்றும் சாம் ஜரிவி தெரிவித்துள்ளார்.

சர்வதேச சமூகமும் மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்புகளும் வெளியிட்டுவரும் கவலைகளைச் செவிமடுக்க இலங்கை அரசு தயாரில்லைப்போலத் தோன்றுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகளும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றனர் எனக் குற்றச்சாட்டுச் சுமத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது உலகினால் மறக்கப்பட்ட மோதலல்ல என்பதை ஜனாதிபதி ராஜபக்ஷ புரிந்துகொள்வார் எனத் தாம் எதிர்பார்க்கின்றார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி ஆர்ப்பாட்டத்தின்போது இலங்கை ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படுவது, தாக்கப்படுவது, தடுத்து வைக்கப்படுவது ஆகியன குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments: