இலங்கையில் தொடர்ந்துவரும் மோதல்கள், வன்முறைகளால் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய விவகாரங்களின் இணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனைவிட விடுதலைப் புலிகளால் இதுவரை இணைத்துக்கொள்ளப்பட்ட சிறுவர் போராளிகளின் எண்ணிக்கை 6,259 எனவும், விடுதலைப் புலிகள் தரப்பிலிருக்கும் சிறுவர் போராளிகளில் 3,784 பேர் ஆண்கள் எனவும், 2,475 பேர் பெண்கள் எனவும் அந்த அலுவலகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்பொழுது தடுத்துவைக்கப்பட்டிக்கும் 1,410 பேரில் 146 பேர் 18 வயதுக்குக் குறைந்தவர்கள் எனவும், இதில் 1,264 பேர் சேர்க்கப்படும்போது 18 வயதுக்குக் குறைவாக இருந்தவர்கள் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், விடுதலைப் புலிகள் சிறுவர்போராளிகளை விடுவித்திருப்பதாக யுனிசெப் கூறியுள்ளபோதும், சிறுவர் போராளிகள் விடுவிக்கப்பட்டுள்ளார்களா என்பது சந்தேகத்துக்கிடமாகவே இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.
எனினும், சிறுவர் போராளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுவது பிழையான வழிநடத்தலாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. தொடர்ந்தும் அங்கு இடம்பெற்றுவரும் மோதல் சம்பவங்கள் இதற்கு சான்றாக அமைந்துள்ளன என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய விவகாரங்களின் இணைப்பு அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டின்கீழ் உள்ளன. அங்கு தற்பொழுது சிறுவர்களும், பெரியவர்களும் படையில் இணைத்துக்கொள்ளப்படுவதாக தமக்குத் தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அல்லது கருணா தரப்பினரால் கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக 496 சிறுவர் போராளிகள் இணைத்துக்கொள்ளப்பட்டனர். இவர்களில் பெருபாலானவர்கள் ஆண்கள். இவர்களில் 189 பேர் இதுவரை விடுவிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எஞ்சியிருப்பவர்களில் 76 பேர் 18 வயதுக்குக் குறைந்தவர்கள் எனவும், அண்மையில் 40 சிறுவர் போராளிகள் பாதுகாப்புத் தரப்பினரிடம் சரணடைந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சிறுவர் போராளிகள் சிலரை அரசாங்கத்திடம் ஒப்படைத்திருந்தனர். விடுவிக்கப்பட்ட சிறுவர்களின் நலன்கள் தொடர்பாக யுனிசெப், சேவ்த சில்றன், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை போன்றன கவனம் செலுத்தியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய விவகாரங்களின் இணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதனைவிட இலங்கையில் தொடர்ந்துவரும் மோதல்களால் சிறுவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதுடன், மோதல்கள் இடம்பெறும் பகுதிகளிலுள்ள நூற்றுக்கணக்கான சிறுவர்கள் பாடசாலைகளுக்குச் செல்லமுடியாமல், போதிய உணவு வசதிகளின்றி போசாக்கின்மைக்கு முகம்கொடுத்திருப்பதாகவும் அந்த அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment