Tuesday, 3 June 2008

நோபல் பரிசு பெறுவதற்கு இலங்கைத் தமிழர் ஒருவரை சிபாரிசு செய்யுமாறு அமெரிக்கத் தமிழர்கள் குழு கோரிக்கை

சமாதானத்திற்கான நோபல் பரிசு பெறுவதற்குத் தகுதியான இலங்கைத் தமிழர்களை சிபாரிசு செய்யுமாறு அமெரிக்கத் தமிழர்கள் குழுவொன்று கோரிக்கை விடுத்துள்ளது.

வரலாற்றில், பல்வேறு நாடுகளில் நடைபெற்ற சிவில் யுத்தங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்குப் பாடுபட்ட அந்நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் சிலர் சமாதானத்திற்கான நோபல் பரிசைப் பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் அந்தக் குழு, தென்னாபிரிக்காவைச் சேர்ந்த நெல்சன் மண்டேலா, டெஸ்மன்ட் டுட்டு, கிழக்குத் திமோரைச் சேர்ந்த ஜோஸ் ராமோஸ், போலந்தைச் சேர்ந்த லெச் வலேன்சா ஆகியோரையும் இதற்கு உதாரணங்களாகச் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் இவர்களுக்குச் சமனாக ஒரு தமிழரைத் தாம் தேடுவதாகவும் அமெரிக்காவிலுள்ள 'தமிழ் நோபல்பரிசு சிபாரிசுக் குழு' குறிப்பிட்டுள்ளது.

மேற்படி நோபல் பரிசு பெற்றவர்கள் எவரும் அதனைப் பெறுவதற்கு முன்னர் சர்வதேச ரீதியில் பிரபல்யம் பெற்றிருக்கவில்லை எனவும், குறிப்பாக கிழக்குத் திமோரைச் சேர்ந்த ஜோஸ் ராமோஸ், தென்னாபிரிக்காவைச் சேர்ந்த டெஸ்மன்ட் டுட்டு ஆகியோர் நோபல் பரிசு பெறும்வரையில் சொந்த நாட்டைத் தவிர வெளியுலகில் பிரபல்யம் பெற்றிருக்கவில்லை என்றும், ஆகவே சிபாரிசு செய்யப்படும் எவரும் பிரபல்யம் பெற்றோராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் அந்தக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறு சிபாரிசு செய்யப்படுவோர், இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் மனிதாபிமானப் பணியாளர்களாகவோ, அல்லது யுத்த காலப்பகுதியிலோ அல்லது சுனாமிக்குப் பின்னர் அரச சார்பற்ற நிறுவனங்கள் அல்லது உதவி ஸ்தாபனங்களுக்கூடாக பொது மக்களுக்கு உதவி புரிந்தவராகவோ இருக்க முடியும் எனவும் அந்தக் குழு குறிப்பிட்டுள்ளது.

அல்லது அவர்கள் மதத் தலைவர்களாகவோ, மனித உரிமைகள் ஆர்வலர்களாகவோ கூட இருக்க முடியும் என்றும் அந்தக் குழு குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் யுத்தம் நடைபெறுகின்ற காலப்பகுதியில் தமிழ் பிரதேசங்களில் உதவி புரிந்த எந்தவொரு பொருத்தமான நபரையும் இதற்காக சிபாரிசு செய்ய முடியும் என்றும் அந்தக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளை, இதற்கான சிபாரிசுகளை தமிழர்கள் அல்லாதவர்களிடமிருந்து வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ள அந்தக் குழு, சிங்களவர்களும் தமிழர்களும் புரிந்துணர்வுடன் செயற்படுவதன் மூலம் சமாதானத்தைக் கட்டியெழுப்பி நாட்டை உறுதியான பாதையில் வழிநடாத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

No comments: