Wednesday, 4 June 2008

தெகிவளை குண்டு வெடிப்பு: பிரதான சந்தேக நபர் தப்பினர், ஒன்பது தமிழர்கள் கைது

தெகிவளை தொடரூந்துப் பாதையில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். 27 பேர் காயமடைந்த இந்தச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி தப்பிவிட்டதாகத் தெரிவித்திருக்கும் காவல்துறையினர், பிரதான சந்தேக நபராகக் கருதப்படுபவருடைய பெயர் விபரங்கள் மற்றும் புகைப்படம் என்பவற்றையும் வெளியிட்டுள்ளார்கள்.

இன்று காலை 7.10 மணியளவில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தையடுத்து அப்பகுதியில் சோதனை நடத்திய காவல்துறையினரும், படையினரும் குண்டுதாரியினுடையது எனக் கருதப்படும் பை ஒன்றைக் கண்டெடுத்தனர். குறிப்பிட்ட பையிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தின் அடிப்படையிலேயே குண்டுதாரியின் பெயர் மற்றும் புகைப்படம் என்பன வெளியிடப்பட்டுள்ளன.

இதனைவிட குறிப்பிட்ட பையிலிருந்து ஆவணங்கள் பலவும் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதன் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளையில், இன்றைய சம்பவத்தையடுத்து தெகிவளை, கல்கிசை மற்றும் கொகுவளை பகுதிகளில் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளின் போது பெண் ஒருவர் உட்பட ஒன்பது தமிழர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், குண்டுதாரி ஜெகதீசன் பாலசுப்பிரமணியம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். 1978 ஆகஸ்ட் 28 ஆம் திகதி பிறந்த இவரது அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு இலக்கம் என்பனவும் காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. வத்தளைப் பகுதியில் வசித்து வந்தாகத் தெரிவிக்கப்படும் இவருடைய புகைப்படமும் காவல் துறையினரால் வெளியிடப்பட்டிருக்கின்றது.

இச்சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் குண்டு தொடரூந்துப் பாதையில் பொருத்தப்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இது தொலை இயக்கி மூலம் வெடிக்கவைக்கக் கூடியதாகப் பொருத்தப்பட்டிருந்ததாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் தெரிவித்தனர். தொலை இயக்கியை இயக்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகத்தான் பாணந்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்த தொடரூந்து மயிரிழையில் தப்பித்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இருந்தபோதிலும் குறிப்பிட்ட தொடரூந்தின் கடைசிப் பெட்டியிருந்த படிக்கட்டு இந்தக் குண்டு வெடிப்பில் சேமடைந்தது. சில மீற்றர் சென்ற பின்னர் தொடரூந்து நிறுத்தப்பட்டது. தொலைதூர இயக்கி மூலமாக குண்டை வெடிக்கச் செய்தவர் தொலைதூர இயக்கியுடன் தப்பியோடுவதை கண்டதாக அப்பகுதிவாசிகள் தெரிவித்தனர். தொலைதூர இயக்கியை செயற்படுத்துவதில் ஏற்பட்ட ஏதோ ஒரு பிரச்சினை காரணமாகவே குண்டு வெடிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தப்பியோடிய குண்டுதாரியை சிலர் துரத்திச் சென்றதாகவும் இருந்தபோதிலும், காலி வீதிக்கு வந்த அவர் பேரூந்து ஒன்றில் ஏறித் தப்பிச் சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இருந்தபோதிலும் சிலர் முச்சக்கர வாகனங்கள் மூலம் குறிப்பிட்ட பேரூந்தைத் துரத்திச் சென்று வழிமறித்த போதிலும், குண்டுதாரி பேரூந்தில் ஏறிய சில விநாடிகளிலேயே அதிலிருந்து இறங்கித் தப்பிச் சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளையில், இன்றைய குண்டு வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்திருப்பதாக களுபோவிலை மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இதில் 21 பேர் ஆண்கள். ஒன்பது பேர் பெண்களாவர். இவர்களில் எவரும் பாரதூரமான முறையில் காயமடையவில்லை எனவும் சிறிய காயங்களுக்கே உள்ளாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

thank you:ajeevan.ch

http://www.ajeevan.ch/content/view/3146/1/

No comments: