போலி கடவூச்சீட்டில் பயணித்தமை தொடர்பில் பிரித்தானியாவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்டுள்ள கருணா இன்று அல்லது நாளை நாடு கடத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
கருணா பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரியிருந்தார், அவரது கோரிக்கையை பிரித்தானிய அரசாங்கம் நிராகரித்துள்ளது. இதேவேளை கருணா இலங்கை மக்களுக்கு செய்த தவறுகளுக்காக அவருக்கு எதிராக இலங்கை அரசாங்கம் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை கேட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண தலைவராக இருந்த கருணா, அந்த அமைப்பில் இருந்து விலகிய பின்னர் அரசாங்க படைகளுடன் இணைந்து செயற்பட்டார்.
இந்த நிலையில் சுற்றாடல்துறை அமைச்சின் அதிகாரி ஒருவரின் பெயரில்; வழங்கப்பட்ட விசாவுடன் லண்டன் சென்ற கருணா குடிவரவு சட்டத்தின் கீழ்கைதுசெய்யப்பட்டார்.
இந்த நிலையில் கருணா நடு கடத்தப்பட்டு அவர் இலங்கைக்கு அனுப்பட்டால், அவருக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்து விசாரணைகளை நடத்துவது, இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பும் கடமையும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
இது இலங்கை நீதிமன்ற கட்டமைப்பு தொடர்பான பரீட்சிப்பாகும். இந்த குற்றங்கள் இலங்கைக்குள் இலங்கை மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் அரசாங்கம் வீசாரணை ஒன்றை நடத்தி வழக்கு தாக்கல் செய்யவில்லையெனில் உண்மையான பிரச்சினை கருணாவுக்கு ஏற்படாது, எனினும் அரசாங்கத்திற்கு பிரச்சினை ஏற்படும் காரணம் மனித உரிமைகள் மீறப்படுகின்றது என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டாக வேண்டும் எனவும் மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
மன்னிப்புச் சபை இவ்வாறு கூறினாலும் கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை கருணாவுக்கு வழங்க அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment