ஜனநாயகக் கட்சி வேட்பாளர் போட்டியில் போதுமான வாக்குகளை பராக் ஒபாமா பெற்றுள்ளதால், ஹிலாரி கிளிண்டன் போட்டியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார்.
வெற்றியை நோக்கிப் பயணிக்கும் பராக் ஒபாமாவுக்கு ஹிலாரி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரை தீர்மானிக்கும் கட்டம் நெருங்கியுள்ளது. பராக் ஓபாமா வெற்றிக்குத் தேவையான 2,118 வாக்குகள் என்ற இலக்கை வெற்றிகரமாக தாண்டியுள்ளார்.
இதன்பின்னர், எந்த வகையிலும் ஹிலாரியால் வெற்றி பெற முடியாத நிலை உருவாகியுள்ளது.இருப்பினும் தனது தோல்வியை பகிரங்கமாக ஹில்லாரி ஒப்புக் கொள்ளாததுடன், தனது ஆதரவாளர்களுடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கலந்துரையாடப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மின்னசோட்டாவில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரைநிகழ்த்திய ஒபாமா, அமெரிக்காவை சிறந்ததொரு எதிர்காலத்திற்கு நாம் அழைத்துச் செல்லப் போகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி வேட்பாளராகத் தேவையான வாக்குகளை ஒபாமா பெற்றுள்ளதன் மூலம் கடந்த 17 மாதங்களாக நடைபெற்று வந்த வேட்பாளர் போட்டி முடிவுக்கு வந்துள்ளது.
மேலும், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதல் கறுப்பர் இன வேட்பாளர் என்ற பெருமையும் ஓபாமாவுக்குக் கிடைத்துள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றால், முதல் கறுப்பர் இன ஜனாதிபதி என்ற சாதனையை ஒபாமா பெற்றுக்கொள்வார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் டென்வரில் நடைபெறவுள்ள ஜனநாயகக் கட்சியின் மாநாட்டில், கட்சியின் வேட்பாளராக பாரக் ஒபாமா உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளார்.
ஆளும் குடியரசுக் கட்சியின் சார்பில் ஜோன் மெக்கெய்ன் ஒபாமாவை எதிர்த்து போட்டியிடவுள்ளார்.
எதிர்வரும் நவம்பரில் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது.

No comments:
Post a Comment