Wednesday, 4 June 2008

காத்தான்குடியில் நான்காவது நாளாகவும் இயல்பு நிலை பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் நான்காவது நாளாக இன்று புதன்கிழமையும் கடையடைப்பு மேற்கொள்ளப்படுவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு நிலவும் பதற்றம் நீடித்து வருகின்றது.

மட்டக்களப்பு காத்தான்குடி முஸ்லிமகள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளைக் கண்டித்தே இந்த கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கடையப்பு மேற்கொள்ளப்படுவதால் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் வியாபார நிலையங்கள் அனைத்தும் பூட்டப்பட்டுள்ளதுடன் அரச அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளும் இயங்கவில்லை.

அதேநேரம் கடையடைப்பிற்கான அழைப்பை விடுத்திருக்கும் முஸ்லிம் இளைஞர்கள் வீதியில் ரயர்களைப் போட்டு எரித்து போக்குவரத்தையும் தடை செய்துள்ளனர். காத்தான்குடி ஊடாகவே தமிழ் மக்கள் பயணிக்க வேண்டிய நிலை இருந்தும் முஸ்லிம் இளைஞர்கள் மேற்கொள்ளும் இத்தகைய நடவடிக்கைகளால் அங்கே தமிழ் மக்களின் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதாகவும் இரு இனங்களுக்கும் இடையில் தொடர்ந்தும் பதற்றமான நிலை நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடையடைப்பு மேற்கொள்ளப்படும் நான்காவது நாளான இன்றைய நாள் கிழக்கு மாகாண சபையின் முதலாவது அமர்வு திருகோணமலை உட்துறைமுக வீதியில் உள்ள மாகாண சபை மண்டபத்தில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பலத்த பாதுகாப்புகளுடன் இடம்பெறும் இந்த அமர்வை கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி புறக்கணித்துள்ளது.

கிழக்கு மாகாண சபையின் முதலாவது அமர்வை புறக்கணிக்குமாறு காத்தான்குடி உலமாக்கள் சபை நேற்றைய நாள் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே காத்தான்குடியில் தொடர்ந்தும் கடையடைப்பு மேற்கொள்ளப்படுகின்றது.

No comments: