Wednesday, 4 June 2008

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று இணையத்தில்!

 புதிய கல்வியாண்டில் பல்கலைக் கழகங்களுக்கு மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான இஸட் ஸ்கோர் வெட்டுப் புள்ளிகள் இன்று மாலை வெளியிடப் படவுள்ளதாக பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2007 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கான வெட்டுப் புள்ளிகளை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கும் நிகழ்வு பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் கேட்போர் கூடத்தில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இஸட் ஸ்கோர் வெட்டுப் புள்ளிகளை இணையத்தளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதனை பல்கலைக்கழக ஆணைக்குழுவின் இணையத்தளமான www.ugc.ac.lk இல் இன்று பிற்பகல் 2.00 மணியிலிருந்து பார்வையிடலாம் என பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கடந்த வருடம் இடம்பெற்ற உயர் தரப் பரீட்சைகளின் பெறுபேறுகளுக்கமைய பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் ஏற்கனவே ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதற்காக சுமார் 40 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 19550 பேர் பல்கலைக்கழகங்களுக்கு இவ்வாண்டு அனுமதிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்கும் கடந்த 2006 ஆம் கல்வியாண்டுக்காக 18030 மாணவர்களே அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: