கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்ட பதினைந்து உறுப்பினர்களும் இன்று காலை கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
சத்தியப்பிரமாண நிகழ்வு கொழும்பிலுள்ள ஐ.தே.கட்சி தலைமைக் காரயிhலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஐ.தே.கட்சியில் இணைந்து போட்டியிட்டுத் தெரிவான சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
இங்கு உரை நிகழ்த்திய ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தேர்தலில் தமது கூட்டணி வென்றிருந்தால் இந்தப் பதவியேற்பு நிகழ்வு வேறு விதமாக இருந்திருக்குமெனவும், இங்குள்ளவர்கள் முதலமைச்சராகவும், அமைச்சர்களாகவும் பதவியேற்றிருப்பார்கள் என்றும் குறிப்பிட்டார்.
கிழக்கில் ஜனநாயகத்தையும் இனநல்லுறவையும் நிலைநாட்டுவதன் மூலம், நாட்டின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கிலேயே தாம் தேர்தலில் போட்டியிட்டதாகவும், பதவி ஆசைகளுக்காக தேர்தலில் போட்டியிடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தம்மை தேசத்துரோகி என வர்ணிப்பதாகக் குறிப்பிட்ட ரணில் விக்கிரமசிங்க, இராணுவத்தில் பதவி வகித்த காலத்தில் அதனைவிட்டுவிட்டு அமெரிக்காவுக்குச் சென்ற கோதபாயவே தேசத்திற்குத் துரோகமிழைத்ததாகவும் குறிப்பிட்டார்.
இங்கு உரை நிகழ்த்திய சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அரசாங்கத்தின் சிறுபான்மை விரோதப் போக்கை எதிர்ப்பதற்காகவே தாம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டிணைந்து போட்டியிட்டதாகக் குறிப்பிட்டார்.
அத்துடன் யுத்தத்தின் மூலமே நாட்டின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும் எனும் ஜனாதிபதியின் நிலைப்பாடு பிழையானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சிறுபான்மை மக்களை அடக்கியாள முனையும் இந்த அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் தொடர்ந்தம் முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட கிழக்கு மாகாண சபையின் முதலாவது அமர்வு இன்றைய தினம் திருகோணமலையில் ஆரம்பமாகியுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் அதனைப் பகிஷ்கரித்துவிட்டே இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment