ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் செய்துவரும் குடும்ப அரசியலை முடிவுக்குக்கொண்டுவந்து மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்வரை போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளைப் பின்பற்றாமல் தனது சொந்த குடும்பக் கொள்கைகளைப் பின்பற்றிவருவதாகக் குறிப்பிட்ட ரணில் விக்ரமசிங்க, இதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள், வீதிமறியல் போராட்டங்கள் உட்பட நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுத்து தற்போதைய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பப்போவதாகக் கூறினார்.
நாட்டு மக்கள் பொருள்விலையேற்றம், குண்டுத் தாக்குதல்கள், 30 வீதப்பணவீக்கம், எரிபொருள் விலையெற்றம் போன்றவற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கமோ அமைச்சர்களின் எண்ணிக்கையைக் குறைக்காமல் அவர்களின் ஆடம்பரச்செலவுக்கென பெருமளவு பணத்தை வீண்விரயம் செய்துவருகிறது. ஆனால் மக்களின் வாழ்க்கைச்செலவு அதிகரித்து பாதிக்கப்படுகின்றனர். அது பற்றி அரசாங்கம் கவலையடைவதில்லை என அவர் குற்றஞ்சாட்டினார்.
மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொண்டுள்ளனர். உண்மை நிலைமையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் ஊடகங்கள் மீதும் அரசாங்கம் தாக்குதல்களை நடத்துகிறது. இவ்வாறான நிலையில் அரசாங்கத்திடமிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மேலும் கூறினார்.
No comments:
Post a Comment