Tuesday, 10 June 2008

'தினக்குரல்" வார ஏட்டுக்காக தாரகா எழுதிய - 'சிங்கள மக்களின் பிரச்சினை என்ன?"

'நாங்கள் பசியுடன் இருக்கின்றோம்", 'எங்கள் வாழ்க்கை மிகவும் செலவு மிகுந்ததாக ஆகி விட்டது", 'நீங்கள் எங்களை கொல்லவா பார்க்கின்றீர்கள்", இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜவரிக் கோஸ்டில் மக்கள் கோசமிட்ட வார்த்தைகள்.

இன்று மூன்றாம் உலக நாடுகள் எங்கும் அதிகரித்துச் செல்லும் பொருள் விலையேற்றத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் மக்கள் வீதிக்கு இறங்கியிருக்கின்றனர்.

இன்றைய உலக அரசியல் போக்கில்; பசித்தவர்களின் புரட்சி குறித்து அச்சங்கள் நிலவுவதாகச் சொல்லப்படுகின்றது. சரி இந்த பின்புலத்தில் கொழும்பின் அரசியலை பார்ப்போம். அங்கு என்ன நிகழ்கின்றது?

தற்போது அதிகரித்துச் செல்லும் விலையேற்றங்களை தாங்கிக்கொள்ள முடியாத சாதாரண சிங்கள மக்கள் அரசுக்கு எதிராக கிளர்ந்து எழுவார்கள். அவர்கள் அரசைக் கேள்வி கேட்பார்கள் என்றெல்லாம் சிலர் நம்புகின்றனர்.

உலக வரலாற்றின் பின்புலத்தில் பார்த்தால் இவ்வாறு நம்புவது நியாயமானதே. ஆனால் அப்படியொன்றும் இலங்கை அரசியல் சூழலில் நிகழப்போவதில்லை. முன்னர் மார்க்சிய ரீதியாக தொழிற்பட்டவர்களிடமும் சில கற்பனைகள் இருந்த வரலாற்றை அரசியல் அறிந்தவர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

சிங்கள, தமிழ், முஸ்லிம் தொழிலாளார்கள் ஒன்றினைந்து ஒரு புரட்சிகர இலங்கையை உருவாக்குவார்கள். அதில் நாம் எல்லோரும் சமத்துவமாக வாழ முடியும் என்றெல்லாம் நமது அரசியல் ஆசான்களிடம் அப்பாவித்தனமான நம்பிக்கைகள் இருந்தன.

ஆனால், சிங்கள இன மத தேசியவாத அரசியலுக்கு முன்னால் இவர்களது கற்பனைகள் எல்லாம் காலாவதியாகிப் போனதே வரலாறு. சிங்கள மக்கள் யதார்த்தத்தை உணர்ந்து வீதிக்கு வருவார்கள். அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்குவார்கள் என்ற கற்பனையும். அத்தகைய ஒன்றுதான்.

மகிந்த ராஜபக்ச அரசு தனது எதேச்சாதிகார அரசியல் நடவடிக்கைகளினால் ஏற்பட்டு வரும் பொருளாதார மந்த நிலையை மக்கள் மீது சுமத்தி வருகின்றது. நாளுக்கு நாள் பொருட்களின் விலை அதிகரித்துச் செல்கின்றது.

தற்போதைய நிலையில் சர்வதேச அளவில் சிறிலங்கா அரசு எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிகளின் பின்புலத்தில் இலங்கையின் பொருளாதார நிலை மேலும் மோசமடையலாம். இந்த நெருக்கடி நிலை மேலும் மக்கள் மீது சுமத்தப்படுவதுடன், தற்போது நிலவும் இராணுவ தன்மையான அணுகுமுறைகள் மேலும் ஒரு இராணுவ ஆட்சிக்கான சூழலை உருவாக்கும்.

இந்த இடத்தில் நாம் கேட்க வேண்டிய கேள்வியோ சிங்கள மக்கள் இவைகள் குறித்து என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றனர்? அதிகரித்துச் செல்லும் விலைவாசிகளால் சிங்களத்தின் சாதாரண மத்திய தர வர்க்கம் நேரடியாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்களின் நிலைப்பாடு இது தொடர்பில் என்னவாக இருக்கின்றது?

சமீப காலமாக மிக மோசமான அளவில் இலங்கையின் பொருளாதார நிலமைகள் வீழ்ச்சியடைந்து செல்லும் பின்புலத்தில்தான் மகிந்த அரசு அதன் சுமைகளை விலையேற்றமாக மக்கள் மீது சுமத்தி வருகின்றது என்பது மிகவும் வெளிப்படையான ஒன்று. ஆனாலும் சிங்கள மக்களிடமிருந்து இது தொடர்பில் எந்த வகையான எதிர்ப்பும் உருவாகவில்லை.

மாறாக சமீபத்திய ஒரு சுயாதீன அமைப்பின் கணிப்பொன்று, சிங்கள மக்களில் 17 வீதமானவர்களே விடுதலைப் புலிகளுடன் பேசி இனப்பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டுமென்பதில் அக்கறை காட்டுவதாகவும் ஏனைய அனைத்து சிங்களவர்களும் யுத்தத்தின் மூலம் புலிகளை அழிக்க வேண்டுமென்ற அரசின் முடிவினை ஆதரிப்பதாகவும் சுட்டிக்காட்டுகின்றது.

நாம் இந்த அடிப்படையில் நின்று சிந்திப்போமானால் சிங்கள மக்களை நேரடியாக பாதித்து வரும் விலையேற்றங்களை இலகுவில் புறந்தள்ளிவிட்டு அரசின் அதி தீவிர நிலைப்பாட்டை எவ்வாறு அவர்களால் ஆதரிக்க முடிகின்றது என்ற உண்மையை விளங்கிக் கொள்ள முடியும்.

சாதாரணமாகவே சிங்கள மக்கள் மத்தியில் தமிழர் வெறுப்பு என்பது மிகவும் பலமாக இருக்கின்றது. மேலோட்டமாக நோக்கினால் எதுவுமே இல்லாது போன்ற ஒரு வெளித்தோற்றமே தெரியும்.

ஆனால், உண்மை வேறானது. சிங்கள மக்களின் பொதுப் புத்தி நிலையில் தமிழர்கள் என்பவர்கள் தங்களுக்கு கீழானவர்கள் என்ற கருத்து மிகவும் வலுவாக நிலை பெற்றிருக்கிறது.

சிங்கள மக்களின் பொதுப்புத்தி நிலையில் மிகவும் இறுக்கமாக இருக்கும் இந்த கருத்து நிலையைத்தான் சிங்கள ஆளும் வர்க்கம் தனது மேலாதிக்க அரசியல் நலன்களுக்கு பயன்படுத்தி வருகின்றது.

சாதாரண சிங்களவர்களின் மனங்களில் புதைந்திருக்கும் தமிழர் வெறுப்பிற்கு சிங்கள பௌத்த மத பீடங்கள் மத வடிவம் கொடுக்கின்றது. சிங்கள ஊடகங்கள் அதற்கான ஒரு சமூக பெறுமதியை கொடுக்கின்றது. இவற்றின் ஒட்டுமொத்த திரட்சிதான் சிங்கள பெருந்தேசியவாதம் என்பது.

சிங்கள மேலாதிக்கத்திற்கு எதிரான தமிழர் அரசியல் ஆயுதப் போராட்டமாக பரிணமித்ததைத் தொடர்ந்து சாதாரண சிங்களவர்களின் தமிழர் வெறுப்பினை சிங்கள ஆளும் வர்க்கம் ஆயுத விடுதலைப் பேராட்டத்தின் மீதான வெறுப்பாக நுட்பமாக மாற்றியது. இதற்கு நான் மேலே குறிப்பிட்ட சிங்கள-பௌத்த மத பீடங்கள் மற்றும் சிங்கள ஆளும் வர்க்க நலன்களைப் பேணும் ஊடகங்கள் என்பன இந்த உருமாற்றத்தை சாத்தியப்படுத்தின.

சாதாரண சிங்கள மக்களைப் பொறுத்த வரையில் தமிழர்களின் ஆயுத விடுதலைப் போராட்டம் என்பது தமிழர்கள் சிங்கள பூமியை ஆக்கிரமிப்பதற்காக நடத்தும் யுத்தம் என்றும் அதனை தடுக்கவே அரசு புனித யுத்தத்தில் ஈடுபடுகின்றது என்றும் பெரும்பாலான சிங்கள சாமாணியர்கள் நம்புகின்றனர்.

சிலர் இதனை சிங்கள மக்களின் அறியாமை என்று சொல்லலாம். ஆனால் எனது வாதம் என்னவென்றால் ஒரு முழுத் தேசத்தையே எவ்வாறு அறியாமையில் ஆட்படுத்த முடியும்.

ஒரு அரசு தான் நினைப்பதை நீண்ட காலத்திற்கு உறுதியாக பேணி வருகின்றதென்றால் அதற்கு மக்கள் ஆதரவு தேவை. கடந்த ஜந்து தசாப்பதங்களாக சிங்களம் தமிழர் பிரச்சனையில் ஒரே விடயத்தையே மீண்டும் மீண்டும் கூறி வருகின்றது. இது பெரும்பான்மையான சிங்கள மக்களின் ஆதரவு இல்லாமல் சாத்தியப்பட முடியாது.

இந்த பின்புலத்தில்தான் சமீப காலமாக அன்றாட வாழ்க்கைச் செலவு மிக மோசமாக அதிகரித்துச் சென்றிருக்கும் நிலையிலும், சிங்கள மக்களிடமிருந்து எந்தவிதமான எதிர்ப்பும் கிளம்பாமல் இருப்பதற்கான காரணத்தை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

சிங்கள மக்களைப் பொறுத்த வரையில் தங்களது வரலாற்று எதிரிகளான தமிழ் ஆக்கிரமிப்பாளர்களுடன் தங்களது இராணுவத்தினர் அர்ப்பணிப்புடன் போராடிக் கொண்டிருக்கின்றனர் என்ற மாயையில் கிடக்கின்றனர்.

ஒரு வேளை இந்த நிலைமை க.வே.பாலகுமாரன் சொல்லுவது போன்று சிங்கள இராணுவம் முழமையாக முறியடிக்கப்படும் போது அந்த மாயத்திலிருந்து சிங்கள மக்கள் விலகக்கூடுமோ என்னவோ? ஆனால் சிங்கள மக்களின் மனோபாவம் தொடர்ந்தும் இப்படித்தான் இருக்கப் போகிறது என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியுமென நான் நம்பவில்லை.

இலங்கையின் அரசியல் வரலாற்றை உற்று நோக்கினால் ஒரு காலத்தில் சாதாரண சிங்கள மக்களின் விமோசனத்திற்கான கட்சிகள் என்ற நம்பிக்கையை பெற்றிருந்த சிங்கள இடதுசாரி அமைப்புக்கள் கூட சி;ங்கள ஆளும் வர்க்கத்துடன் கூட்டமைத்துக் கொண்ட வரலாற்றை நாம் அறிவோம்.

சிங்கள ஆளும் வர்க்கத்திற்கும் சாதாரண சிங்கள மக்களுக்கும் இருக்கும் ஒரேயொரு உறவே இவர்களை இணைக்கும் தமிழர் வெறுப்பு வாதமே ஒழிய வேறொன்றுமில்லை.

சிங்கள ஆளும் வாக்கத்தைப் பொறுத்த வரையில் தமிழர் வெறுப்புவாதம் என்பது தமது அரசியல் மேலாதிக்க நலன்களை பேணிக்கொள்ளும் கருவியாக இருக்கின்றது. சாதாரண சிங்கள மக்களுக்கோ தமிழர் வெறுப்பு என்பது ஒரு வகை மனத்திருப்தி நிலையைக் கொடுக்கின்றது.

சாதாரண சிங்கள மக்களின் மனத்திருப்தி நிலைதான், சிங்கள ஆளும் வர்க்கத்தினால் கைக் கொள்ளப்படும் சிங்கள பெருந்தேசியவாத அரசியல் போக்காகும். ஓன்றை ஒன்று சார்ந்திருப்பதால், இதில் எவ்வாறு மாற்றம் நிகழ முடியும்?

நன்றி: தினக்குரல் (08.06.08)

No comments: