Tuesday, 10 June 2008

தமிழ்நாதத்துக்காக ப.தெய்வீகன் எழுதிய - 'வங்கம் தந்த பாடம்"

உலகளாவிய ரீதியில் விடுதலைக்காக வீறுகொண்டெழுந்த மக்களின் போராட்டங்கள் என்பவை வரலாறு எமக்களித்த மிகப்பெரிய பாடம்.

அது மொழிப்போராட்டமாக இருக்கட்டும், இனப் போராட்டமாக இருக்கட்டும், மதப்போராட்டமாக இருக்கட்டும், நிலப்போராட்டமாக இருக்கட்டும் எதுவானாலும், மக்கள் தமது போராட்டத்தில் காண்பித்த எழுச்சியும் அதன் தொடர்ச்சியுமே அவர்கள் விடுதலையைப் பரிசாக பெற வழி சமைத்திருக்கிறது.

அந்த வகையில், வங்காள தேசம் என்ற தனிநாட்டுக்கான போராட்டத்தில் மக்கள் சக்தி எத்துணை பக்கபலமாக நின்று விடுதலைக்கு வழிகோலியது என்பது ஒற்றுமையை பறை சாற்றும் மிகப்பெரிய உதாரணம்.

காலனித்துவ ஆட்சி அகன்ற பின்னர் பிறப்பெடுத்த நாடு பாகிஸ்தான். இந்தியாவின் கிழக்கில் ஒரு பகுதியும் மேற்கில் ஒரு பகுதியும் சுமார் 2,000 மைல்கள் இடைவெளியில் அமைந்த இரு நிலப்பரப்புக்கள் பாகிஸ்தான் எனப்பட்டது.

ஆட்சிமுறை என்ற வகையில், 1951 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் முதலாவது பிரதமர் லியாத் அலிகான் படுகொலை செய்யப்பட்ட பின்னர் அங்கு இராணுவ ஆட்சியே தொடர்ந்து வந்தது.

மேற்கு பாகிஸ்தான் (இன்றைய பாகிஸ்தான்) அதிகார பீடமே கிழக்கு பாகிஸ்தானையும் (இன்றைய வங்காளதேசம்) ஆட்சி புரிந்தும் வந்தது.

புனித தேசத்தின் பிரபுக்களாக தம்மை கருதிய மேற்கு பாகிஸ்தானின் இராணுவ ஆட்சியாளர்களின் தொடர்ச்சியான அடக்குமுறையும் அடிமைத்தனமும் அரசியல், பொருளாதார ரீதியில் காண்பித்த பாகுபாடும் கிழக்குப் பாகிஸ்தான் மக்களை தனிநாட்டுப் போராட்டத்தின்பால் தள்ளியது.

தனிநாட்டுப் போராட்ட சிந்தனை முனைப்புற்றிருந்த அக்காலப்பகுதியில் 1970 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவிருந்த தேர்தல் மூலம் அதிகாரப்பீடத்துக்கு தக்க பாடம் கற்பிக்கத் தயாராகினர் கிழக்கு பாகிஸ்தான் மக்கள்.

அவர்கள் திட்டமிட்டபடி தேர்தலில் கிழக்கு பாகிஸ்தான் மக்களின் ஏகப்பிரதிநிதியான அவாமி லீக் கட்சி முஜிபுர் ரஹ்மான் தலைமையில் அமோக வெற்றியீட்டியது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை சுவீகரித்தது.

அவாமி லீக்கின் வெற்றியைப் பொறுக்க முடியாத மேற்கு பாகிஸ்தான் இராணுவ ஆட்சியாளர்கள் தேர்தலை முடிவுகளை நிராகரித்து, கிழக்கு பாகிஸ்தானின் கட்சி ஆட்சிப்பீடம் ஏறமுடியாதென அறிவித்தது.

அடக்க நினைத்த இனம் எம்மை ஆளப்போகிறதா என்ற சீற்றத்தில், கிழக்கு பாகிஸ்தான் மீது இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது.

ஆட்சியை கைப்பற்றிய அவாமி லீக் கட்சி ஆதரவாளர்கள் உட்பட கிழக்கு பாகிஸ்தான் மக்களை கொன்றொழிக்க தயாரானது மேற்கு பாகிஸ்தான் இராணுவம்.

நிலைமையைப் புரிந்துகொண்ட அவாமி லீக் கட்சியின் தலைவர் முஜிபுர் ரஹ்மான் - 'மக்களே எமது விடுதலைக்காக போராட வேண்டிய நேரம் வந்துவிட்டது" - என்று அறைகூவல் விடுத்தார்.

அதேவேளை, 'கிழக்கு பாகிஸ்தான் மக்களில் 3 மில்லியன் பேரைக்கொன்று தள்ளுங்கள். எஞ்சியிருப்போர் எமது கைகளை நக்கிப் பிழைப்பு நடத்தட்டும்" என்று அப்போதைய இராணுவ ஆட்சியாளர் ஜகயா கான் தனது இராணுவத்தினருக்கு உத்தரவிட்டார். (அப்போது கிழக்கு பாகிஸ்தான் மக்கள் தொகை 75 மில்லியன்)

1971 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் நாள், கிழக்கு பாகிஸ்தானுக்குள் புகுந்து வேட்டையாடத் தொடங்கின மேற்கு பாகிஸ்தான் படைகள். ஒரே இரவில் 7,000 பேரை பலியெடுத்தன. ஒரு வாரத்தில் சுமார் 30,000 பேர் கொல்லப்பட்டனர். பல லட்சக்கணக்கான மக்கள் உயிரைப்பிடித்துக் கொண்டு இடம்பெயர்ந்தோடி ஏனைய நாடுகளில் தஞ்சம் புகுந்து கொண்டனர்.

களத்தில் கிழக்கு பாகிஸ்தான் மக்களின் முக்தி பாகினி படை மேற்கு பாகிஸ்தான் இராணுவத்துக்கு எதிராக போரிட்டுக் கொண்டிருந்தது.

போரினை எதிர்க்கத்துணிந்த கிழக்கு வங்காளதேச இளைஞர்களால் உருவாக்கப்பட்ட வங்காளதேச இராணுவமும் முக்தி பாகினியுடன் இணைந்து மேற்கு பாகிஸ்தான் படையுடன் மோதியது.

இது இவ்வாறிருக்க, கிழக்கு பாகிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்து வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்த மக்கள் வெறுமனே ஓலமிட்டவாறு இருந்து விடவில்லை.

அவாமி லீக் கட்சி தலைவர் அறைகூவிய விடுதலைப் போர் முரசு அவர்களின் செவிகளில் ஒலித்துக்கொண்டேயிருந்தது. தாம் தஞ்சம் புகுந்த நாடுகளில் இருந்து கொண்டு, தமது தாயகத்துக்கு விடுதலை கோரி போரிட்டனர்.

இந்தியாவில் தஞ்சம் புகுந்த கிழக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசிரியர்கள், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் அனைவரும் இணைந்து சபை ஒன்றினை அமைத்து தமது மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளை ஆதாரங்களுடன் ஆவணமாக அமைத்து உலகெங்குமுள்ள தூதரகங்களுக்கு அனுப்பி வைத்தார்கள்.

வங்காள தேச மக்கள் புலம்பெயர்ந்து அதிகம் வாழ்ந்த இடமான பிரித்தானியாவில், அக்காலப்பகுதியில் விடுதலைக்காக வங்காளதேச மக்கள் ஆற்றிய பங்களிப்பை பிரித்தானியர்கள் இன்றும் மறக்க மாட்டார்கள் என்று பிரித்தானிய எழுத்தாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வளவு தூரம், தமக்கான தேசம் வெற்றி கொள்ளப்பட வேண்டும் எனப் பல்வேறு வழிகளிலும் துரிதமாக ஒருவித வெறியுடன் செயற்பட்டனர்.

தாயகத்தில் தமது உறவுகளின் கதறல் உரக்க கேட்கும்போதெல்லாம் ஆயிரக்கணக்கான தமது மக்களை திரட்டிக்கொண்டு லண்டன் வீதிகளில் இறங்கி தமது மக்களை காப்பாற்றுமாறு போராடினர்.

லண்டனிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தை முற்றுகையிட்டு போராடினர். பகல்-இரவு பாராது உண்ணாநிலைப் போராட்டங்களை மேற்கொண்டு பிரித்தானியா மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அரசுக்கு அழுத்தம் கொடுத்தனர்.

பிரித்தானியா வாழ் அனைத்து வங்காள மக்களும் தத்தமது பகுதிகளில் வாரமொரு முறை கூடி தமது நடவடிக்கைகளை திட்டமிட்டனர். அதன்படி, பிரித்தானியா நாடாளுமன்ற உறுப்பினர்கள், கல்விமான்கள், இராஜதந்திரிகள் ஆகியோரைச் சந்தித்து தமது தாயக மீட்புப்போரின் நியாயப்பாடுகளை எடுத்துக்கூறினர்.

அக்காலப்பகுதியில், பிரித்தானியாவுக்கு வருகை தந்த நாட்டுத் தலைவர்கள், இராஜதந்திரிகள் அனைவரையும் சந்தித்து வாங்காளதேச கல்விமான்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

பிரித்தானியாவுக்குள் மாத்திரமன்றி ஐரோப்பிய நாடுகளுக்கும் வங்காளதேச மக்களின் கல்விமான்கள் குழு தமது தாயக மீட்புக்கான பிரச்சாரப் பறவைகளாக பறந்தனர்.

தமக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகளால் சீற்றமடைந்த மேற்கு பாகிஸ்தான் இராணுவ ஆட்சியாளர்கள், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பிரித்தானியாவில் கல்வி கற்றுக்கொண்டிருந்த வங்காள மாணவர்களுக்கான அரச மானியங்களை நிறுத்தியது. அவர்களின் கடவுச்சீட்டுக்களை பறிமுதல் செய்தது.

ஆனால், அவர்களின் பூச்சாண்டி விளையாட்டுக்கள் எல்லாம் விடுதலை தாகத்திலிருந்த வங்காளதேச மக்களின் முன் எடுபடவில்லை. மேலும், மேலும் தமது போராட்டங்களில் முனைப்பாயினர்.

1971 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 30 ஆம் நாள் லண்டனில் நடைபெற்ற புலம்பெயர்ந்த வங்காளதேச மக்களின் போராட்டம், அவர்கள் ஈட்டிய மிகப்பெரும் வெற்றி எனக்கூறலாம்.

அப்போது லண்டன் சென்றிருந்த படுகொலை செய்யப்பட்ட முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் தங்கியிருந்த க்ளாரிட்ஜஸ் ஹோட்டலின் முன்பாக திரண்ட பல்லாயிரக்கணக்கான வங்காளதேச மக்கள், தமது தாயகத்தின் விடுதலைக்கு கண் திறக்குமாறு கோரி மிகப்பெரிய பேரணி ஒன்றை நடத்தினர்.

பாரதத்தின் கண்களை திறக்க முற்பட்டனர். முயற்சி வென்றது.

அதே ஆண்டு டிசம்பர் மாதம் 3 ஆம் நாள் வங்காள தேசத்தை தனிநாடாக இந்தியா அங்கீகரித்தது.

மண் மீட்புப்போரில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வங்காளதேச மக்களுடன் இந்திய இராணுவம் இணைந்தது.

மேற்கு பாகிஸ்தான் படைகள் மேற்கொண்ட ~கிழக்கு பாகிஸ்தான் மக்களை தேடியழிக்கும்| படை நடவடிக்கையின் மூன்றாவது பாகத்துடன் அவர்களின் அட்டூழியம் முடிவுக்கு வந்தது.

சுதந்திர வங்காளதேசம் பிறந்தது. (வங்கத்தின் இந்த வரலாறு 70-களில் தோன்றிய ஈழத்தமிழர் மாணவர் பேரவைக்கு பெரும் முன்னுதாரணமாக திகழ்ந்தமையும் தமிழர் போராட்டத்துக்கும் இந்தியா அத்தகைய ஆதரவைத்தரும் பெரும் எதிர்பார்ப்பை அது அப்போது வளர்த்துக்கொண்டமையும் பின்னர் இந்தியப் புலனாய்வுத்துறையான ~றோ|வின் சதியால் வங்காளதேச சுதந்திரப் போராட்ட வீரர்கள் கொன்றொழிக்கப்பட்ட போது இந்தியாவின் கபட நோக்கத்தை ஈழத்தமிழர்கள் வங்கம் தந்த பாடமாக கற்றுக்கொண்டமையும் மறக்கவோ மறுக்கவோ முடியாத உண்மைகள்)

ஒரு சிறிய நாடு. இராஜதந்திர வெற்றியால் அன்றி, இராணுவ வெற்றியால் தனிநாடாக அமைவதனை கனவிலும் எதிர்பார்க்க முடியாத தேசம் சுதந்திரமடைந்தது.

அக்கால அரசியல் நெளிவு- சுளிவுகளை செவ்வனே பயன்படுத்தி அவற்றை தமக்கு சார்பாக்கி தமக்கான தாயகத்தை வென்றெடுத்ததில் வங்காளதேசத்தின் புலம்பெயர் மக்கள் காண்பித்த ஓர்மம், ஒரு வருடத்துக்குள்ளேயே அவர்களுக்கு ஒரு தனிநாட்டை பரிசாகக் கொடுத்தது.

இந்த ஓர்மத்துக்கு ஈழத்தமிழர்கள் சளைத்தவர்களா?

(2)

இன்று புலம்பெயர்ந்து வாழும் ஒவ்வொரு தமிழனும் தன்னைத்தானே கேட்கவேண்டிய கேள்வி இது.

இன்றைய நாளில் எமது மக்கள்

கனடாவில் 3,32,000

பிரித்தானியாவில் 75,000

அவுஸ்திரேலியாவில் 45,000

அமெரிக்காவில் 30,000 - 40,000 பேர் (இந்திய தமிழர்கள் 2-3 லட்சம் பேர்)

பிரான்சில் 60,000 (அதேயளவு பாண்டிச்சேரி தமிழர்கள்)

நோர்வேயில் 12,500-க்கும் அதிகமானோர்

நெதர்லாந்தில் 7,000 - 8,000

ஆகிய எண்ணிக்கையில் பரந்து வாழ்கிறார்கள்.

இவர்களைவிட மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இடங்கள் இலங்கை-இந்திய தமிழர்கள் நெருக்கமாக வாழும் பிரதேசங்கள். இவர்களில் பலர் இன்று சாதனை மன்னர்களாக எத்தனையோ வெற்றிகளைப் படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கல்விமான்களாக அந்தந்த நாடுகளில் விரிவுரையாற்றுகிறார்கள். ஆய்வுகள் செய்கிறார்கள். விஞ்ஞான முயற்சிகளில் முனைப்படைந்துள்ளார்கள். பொருளாதார நிபுணர்களாக உள்ளனர். அரசியல் மட்டங்களில் செல்வாக்குள்ளவர்ளாக திகழ்கிறார்கள். ஆலோசகர்களாக பணியாற்றுகிறார்கள். சட்டமேதைகளாக விளங்குகிறார்கள்.

இவர்களில் ஒவ்வொருவரும் தாயகத்துக்காக செய்த பணிகளை பட்டியலிட்டு வங்காளதேசத்து வரலாற்றுடன் ஒப்பிட்டுப்பார்;க்க எத்தனை பேர் தயார்?.

லட்சக்கணக்கில் பரந்து வாழும் எமது மக்கள் அந்தந்த நாடுகளுக்குச் சென்ற நாள் முதல் இன்றுவரை, ஒரு நாளுக்கு அந்நாட்டின் குடிமகன் ஒருவருக்கு என்ற ரீதியில் எமது போராட்டத்தின் நியாயப்பாட்டை விளக்கி கூறியிருந்தால், அனைத்துலக மட்டத்தி;ல் சிங்களத்தின் பிரசாரம் எடுபட்டிருக்குமா என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

தனியாளாக இந்தப்பணியை செய்ய முடியாதே என்று ஆதங்கப்படுபவர்களுக்கு வங்காளதேசப் போராட்டத்தில் மறக்கமுடியாத அகமட் ஜலால் மிகப்பெரிய உதாரணம்.

ஜப்பானில் அந்நாட்டு புலமைப்பரிசிலில் தனது மேற்படிப்பை மேற்கொண்டுகொண்டிருந்த இவரது பிரசார நடவடிக்கையே வங்காளதேசத்தை ஜப்பான் அரசு அங்கீகரிப்பதற்கு பெரும் தளமாக அமைந்தது.

பன்முகத்திறமை கொண்ட இவர், ஜப்பானில் வங்காளதேச ஆதரவுப்பேரணிகளை ஒழுங்கு செய்து, அதற்கு அந்நாட்டு மக்களின் ஆதரவைப்பெற்றதுடன், அந்நாட்டுப் பத்திரிகைகளில் வங்காளதேசப் போராட்டம் பற்றி தொடர் பத்திகளையும் எழுதி வந்தார்.

வங்காளதேச மக்கள் ஆயிரக்கணக்கில் கொன்றொழிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தபோது, ஜப்பானிய பாடசாலை மாணவர்கள் தமது சிற்றுண்டிப்பணத்தை பாதிக்கப்பட்ட வங்காளதேச மக்களுக்கு அனுப்பி வைக்குமளவுக்கு இவரது பிரசாரம் அங்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

பத்தோடு பதினொன்றாக பேரணியில் கலந்துகொள்வது மட்டும் தேசக்கடன் என்றால், எமது போராட்டத்துக்கு வெளிநாடுகளில் ஆதரவு தரும் அந்நாட்டு குடிமகனுக்கும் எமக்கும் என்ன வித்தியாசம் என்பதை எமது சமூகம் உணரவேண்டும்.

பணத்தால் மட்டும் கிடைத்து விடுவதற்கு விடுதலை ஒன்றும் வியாபாரப் பொருள் அல்ல என்பதனை எமது சமூகத்தின் அனைத்து மட்டத்தினரும் புரிந்துகொள்ள வேண்டியது இன்றைய வரலாற்றுத் தேவை.

இது ஒரு இனத்தின் விடிவு. எமது ஒற்றுமையாலும் அதன் தளத்தில் அனைத்துத் தரப்பினரையும் உள்வாங்கி ஒன்றிணைக்க வேண்டிய வரலாற்றுக்கடமையாலும் மேற்கொள்ள வேண்டிய நீண்ட பாதையில் கிடைப்பது. அந்தப் பாதையில் எமக்கான விடுதலை எந்தச் சந்தியிலும் எம்மை சந்திக்கலாம். அதுவரை போராட வேண்டியதே எமக்கு முன் விரிந்துள்ள அரசியல் வேலைத் திட்டம்.

2000 வருடங்களின் பின்னர் யூதர்கள் தமக்கான தேசத்தை பெற்றார்கள். ஒரு வருடம் கூட போரிடாமலேயே வங்காளதேசம் தனது தேசத்தை வென்று விட்டது. அது கால நீரோட்டத்தில் மிதக்கும் அனைத்துலக அரசியலின் முரண்பாடு. அந்த முரண்பாடுகளை எதிர்பார்த்து போராட்டம் என்பது தனது வேகத்தை குறைக்கலாகாது.

தமிழீழ விடுதலை என்பது தன்முனைப்புள்ள தமிழன் ஒவ்வொருவரினதும் முயற்சியால் உருவாக்க வேண்டியது. அதனைப் புலம்பெயர்ந்துள்ள ஒவ்வொருவரும் செய்வதே களத்துக்கு நாம் சேர்க்கும் பலம்.

No comments: