ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினரான கலாநிதி தேவநேசன் நேசையாவை ஆணைக்குழுவிலிருந்து நீக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை வழங்கியுள்ளார்.
முக்கியமான 15 மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் எட்டு உறுப்பினர்களில் ஒருவராக கலாநிதி நேசையா நியமிக்கப்பட்டிருந்தார்.
இவரை ஆணைக்குழுவிலிருந்து விலகுமாறு ஜனாதிபதி செயலகம் அறிவுறுத்தியிருப்பதாக விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் நிசாங்க உடலாகம தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவின் உறுப்பினரான கலாநிதி நேசையா மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்துடன் தொடர்புகளைக் கொண்டவர் எனவும், அந்த அமைப்பு பாதிக்கப்பட்டவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு செயற்படுவதாகவும் சட்டத்தரி கோமின் தயாசிரி ஜனாதிபதி செயலகத்துக்கு எழுத்துமூலம் அறிவித்திருந்தார்.
“மூதூரில் பட்டினிக்கு எதிரான அமைப்பின் பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் திருகோணமலையில் ஐந்து இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பான விசாரணைகளிலிருந்து அவரை விலகுமாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது” எனத் தெரிவித்திருக்கும் நீதிபதி உடலாகம, கலாநிதி நேசையா ஆணைக்குழுவிலிருந்து இன்றுடன் விலகிக்கொள்வார் எனத் தெரிவித்துள்ளார்.
“பட்டினிக்கு எதிரான அமைப்பில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் அக்கறைகாட்டிவருகிறது. இதனால் அந்த வழக்கு விசாரணைகளிலிருந்து நேசையா விலகிக்கொள்ளவேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. வேண்டுமாயின் ஏனைய வழக்கு விசாரணைகளில் அவர் இணைந்துகொள்ள முடியும்” என்றார் ஆணைக்குழுவின் தலைவர்.
நாளையதினம் நடைபெறவிருக்கும் விசாரணைகளில் ஆணைக்குழு உறுப்பினர் கலாநிதி நேசையாவுக்குப் பதிலாக வேறொருவர் நியமிக்கப்படமாட்டார் என அவர் கூறியிருந்தார்.
எனினும், இந்த விடயம் தொடர்பாக இதுவரை எந்தவொரு தீர்மானத்துக்கும் தான் செல்லவில்லையென காலாநிதி நேசையா கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.
“ஜனாதிபதி செயலகத்திலிருந்து அனுப்பப்பட்டிருக்கும் கடிதத்துக்கான எனது பதிலை வழங்குவதற்கு வெள்ளிக்கிழமைவரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் அதற்கான பதிலை நான் அனுப்பிவைப்பேன்” என்றார் அவர்.
No comments:
Post a Comment