Wednesday, 11 June 2008

முஸ்லிம் காங்கிரஸ், மேலக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் புரிந்துணர்வுடன் செயற்பட இணக்கம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மேலக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளுக்கிடையே பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


சிறுபான்மை தமிழ் பேசும் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த இரண்டு கட்சிகளும் எதிர்காலத்திலே பொதுநோக்கின் அடிப்படையில் புரிந்துணர்வுடன் செயற்படுவதற்கு முதற்கட்ட இணக்கம் காணப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த இரண்டு கட்சிகளும் ஐக்கிய தேசிய கட்சியுடன் பொதுவான கூட்டு செயற்பாட்டில் இருக்கின்றன.

தற்போது காணப்பட்டுள்ள இந்த இரண்டு சிறுபான்மை கட்சிகளுக்கு இடையிலான இணைந்த செயற்பாடு ஐக்கிய தேசிய கட்சியுடனான பொது கூட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் இடம்பெறும்.

தேசிய அரசியல் விவகாரங்களிலும், தேர்தல் விடயத்திலும் பொதுவான இணக்கப்பாட்டை உறுதிப்படுத்தும் முகமாக இந்த இரண்டு கட்சிகளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி கொள்வதற்கும் இணங்கியுள்ளன.

இத்தகைய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தயாரிப்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதன் பாராளுமன்ற உறுப்பினர் சபீக் ரஜாப்டீன் தலைமையிலும், மேலக மக்கள் முன்னணி அதன் மாகாணசபை உறுப்பினர் பிரபா கணேசன் தலைமையிலும் குழுக்களை நியமித்துள்ளன.

இந்த இரண்டு குழுக்களும் இணைந்து நடத்தும் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் தயாரிக்கப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு கட்சிகளினதும் ஒப்புதல்களை பெற்றுக்கொண்ட பின்னர் கைச்சாத்திடப்படும்.


இது தொடர்பில் முதற்கட்ட பேச்சுவார்த்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கிமின் கொழும்பு இல்லத்தில் கடந்தவாரம் நடைபெற்றது.


இதன்போது ரவூப் ஹக்கிமும், மனோ கணேசனும் நேரடியாக சந்தித்து உரையாடினர். மேலும் முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் உயர் பீட உறுப்பினர்களும் மேலக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் கலாநிதி நல்லையா குமரகுருபரன், கொழும்பு மாவட்ட செயலாளர் எஸ்.ராஜேந்திரன், உதவிச்செயலாளர் ஆர்.முரளிதரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


இப்பேச்சுவார்த்தையின் போது மனித உரிமை விவகாரம் தொடர்பில் மனோ கணேசன் எம்பி ஏற்பாட்டாளராக செயற்பட்டுவரும் மக்கள் கண்காணிப்புக்குழுவில் இடம் பெருவதற்கும் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: