Tuesday, 10 June 2008

”வேற்றுமைக்குள் ஒற்றுமைதான் தேவையானது.” அண்ணன் சங்கரிக்கு தம்பி டக்ளஸின் காதல் கடிதம்

த.வி.கூ தலைவர் ஆனந்தசங்கரி அவர்களுக்கு
ஈ.பி.டி.பி செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
விடுத்திருக்கும் பகிரங்க அழைப்பு!

அன்பின் அண்ணை!

நீங்கள் கௌரவ ஐனாதிபதி மகிந்தராஐபக்ச அவர்களுக்கு என் மீது சேறு பூசி இரு பகுதிகளாக எழுதியிருந்த கடிதங்களை ஊடகங்கள் ஊடாக வாசித்திருந்தேன். நான் இம்மடலை எழுதத்தூண்டியது உங்கள் கடிதத்தில் உள்ள விடயங்கள் அல்ல. 2001 இல் புலிகளின் முகவர் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் நீங்கள் தேர்தலில் போட்டியிட்ட போது முன்னாள் ஐனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க அவர்களுக்கு எழுதிய கடிதத்தினை சிறு சிறு மாற்றங்களுடன் ஒரு மீள் வெளியீடாகவே இம்மடலை எழுதியுள்ளீர்கள். இதுவே இம்மடலை எழுவதற்கு என்னை தூண்டியுள்ளது. தங்களால் மீள் வரைவு செய்யப்பட்ட இம்மடலுக்கு புலிகள் சார்ந்த ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்து பிரச்சாரப்படுத்தியிருந்தமை எனக்கு ஆச்சரியமில்லை.

அண்ணை!… நீங்கள் பக்கம் பக்கமாக என்னை பற்றி எழுதியிருந்த கடிதம் குறித்து சில வார்த்தைகளை நான் எழுத நினைத்து பேனாவுடன் அமர்ந்த போது என் ஞாபகத்தில் ஒரு திருக்குறள் தோன்றியது.

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றால் இனிது!….. இதுவே அந்த குறள்!

அண்ணை!…. நானும் நீங்களும் அண்மைய சில காலங்களாக நல்லுறவை பேணி வந்ததுடன் அடிக்கடி தொடர்பிலும் இருந்துள்ளோம். நீங்கள் பாசத்துடன் என்னை தம்பி என்று அழைப்பீர்கள். நானும் பாசத்துடன் கூடிய மதிப்புடன் உங்களை அண்ணன் என்று அழைப்பதுண்டு!

ஒரு வருடத்திற்கு முன்பு நாம் இருவரும் தென்னாபிரிக்காவிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்தோம். அங்கு பல முன்னணி மந்திரி சபை உறுப்பினர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், இந்திய வம்சாவழி தமிழ் அமைப்புகள் என பலரையும் சந்தித்திருந்தோம். புலிகளின் தவறானதும், பொய்யானதுமான பிரச்சாரங்களுக்கு எடுபட்டிருந்த அவர்களுக்கு இலங்கையின் உண்மை நிலவரங்களை எடுத்து விளக்கியிருந்தோம். இவைகள் இன்னமும் என் நினைவலைகளில் இருந்து மங்கிப்போயிருக்கவில்லை. இந்நிலையில் திடீரென என் மேல் உங்களுக்கு வெறுப்புணர்வை ஊட்டியமை என்னவென்று எனக்கு விளங்கவில்லை.

உங்கள் மடலில் என்னைப்பற்றி நீங்கள் குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்கள் எனக்கு புதியவை அல்ல. இவைகள் கடந்த பல வருடங்களாக வீசி எறியப்பட்ட சேற்றில் எஞ்சிய பாகங்களாகும். அவற்றினுள் இரு தசாப்தங்கள் பழமை வாய்ந்தமை. இச்சேறடிப்புகளை எல்லாம் நான் கடந்து வந்து பல காலங்கள் ஆகிவிட்டன. இச்சேற்றுத்துகள்களை அகழ்ந்தெடுத்து என் மீது வீசும்படி தற்போது தூண்டி விட்டிருப்பது என்னவாக இருக்கலாம் என்பது எனக்கு வியப்பை தந்துள்ளது.

வடக்கின் வஷேட செயலணிக்குழுவின் தலைவராக என்னை ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்கள் நியமித்திருந்தமையையே தங்களின் விசனத்திற்குரிய காரணியாக காட்டியுள்ளீர்கள்.

அண்ணை!…. இவ் விஷேட செயலணிக்குழுவின் தலைவராக நான் ஐனாதிபதி அவர்களால் நியமிக்கப்பட்டு, அதற்கான அமைச்சரைவை பத்திரத்திற்கான அங்கீகாரமும் வழங்கப்பட்டவுடன் நான் உங்களுடனும், புளொட் தலைவர் தோழர் சித்தார்த்தன் அவர்களுடனும், ஈ.பி.ஆர்.எல்.எவ் செயலாளர் தோழர் சிறீதரன் அவர்களுடனும் தொடர்பு கொண்டு இவ்விடயத்தை தெரிவித்திருந்தேன். அத்துடன் இச்செயலணிக்குழுவின் மூலம் வடக்கில் வாழும் மக்களின் துயர் துடைக்கும் சேவையை செய்ய முன்வருமாறும் அழைப்பும் விடுத்திருந்தேன்.

இக்குழு நியமிக்கப்பட்டு ஊடகங்களுக்கு அறிவிக்கப்படுவதற்கு முன்னரே நான் உங்களின் ஆதரவையும், ஆலோசனைகளையும் கோரியிருந்தேன்.

தங்களது 75 ஆவது பிறந்ததினத்திற்கான முன்கூட்டிய வாழ்த்துக்களுடன் விடை பெறுகின்றேன்!

நன்றி!

No comments: