கடந்த சில வாரங்களாக வன்னிப் பிரதேசத்தில் தொடர்ந்துவரும் இராணுவ நடவடிக்கைகளால் கிளிநொச்சி மாவட்டத்துக்கு பத்தாயிரம் குடும்பங்கள் இடம்பெயர்ந்திருப்பதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகம் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தின் மடு மற்றும் மாந்தை மேற்குப் பிரதேசங்களிலிருந்து ஏழாயிரம் குடும்பங்களும், முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்குப் பிரதேசங்களிலிருந்து ஆயிரத்து ஐந்நூறு குடும்பங்களும், கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குக் கரையோரப் பகுதிகளிலிருந்து ஆயிரத்து ஐந்நூற்று ஐம்பது குடும்பங்களும் இடம்பெயர்ந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் வடமேற்கேயுள்ள ப+நகரி பிரதேசத்திலிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி இடம்பெயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்ட கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம், இடம்பெயர்ந்தவர்களைத் தங்கவைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
வன்னியில் முப்பதாயிரத்துக்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்வு
கடந்த சில வாரங்களாக வன்னிப் பகுதியில் இடம்பெற்றுவரும் மோதல்களால் முப்பதாயிரத்துக்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனங்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வான் தாக்குதல்களால் பெருமளவானர்கள் இடம்பெயர்ந்திருப்பதாக உலக உணவுத் திட்டம் அறிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் பெருமளவான மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில் வவுனியாவிலிருந்து ஓமந்தைச் சோதனைச் சாவடி ஊடாக மிகவும் குறைந்தளவான நிவாரணப் பொருள்களே வன்னிப் பகுதிக்குக் கொண்டுசெல்லப்படுவதாக யாழ் மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் தெரிவித்துள்ளார்.
“இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை நோக்கி இடம்பெயர்ந்தள்ளனர். இவர்களைக் கண்காணிப்பதற்கு அங்கு யாரும் இல்லை” என யாழ் ஆயர் கவலை வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment