Thursday, 14 August 2008

கிளிநொச்சி நகரை நெருங்க இன்னும் 15 கிலோ மீட்டர்களே--பொன்சேக்கா

கிளிநொச்சி மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் பிரதான முகாம்கள் அமைந்துள்ள பிரதேசங்களான முழங்காவில், மற்றும் முல்லைத்தீவின் கல்விளான் ஆகிய பிரதேசங்களை படையினர் நேற்று கைப்பற்றியுள்ளதாகவும் கிளிநொச்சி நகரை நெருங்க இன்னும் 15 கிலோ மீட்டர்களே இருப்பதாகவும் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.


இராணுவத்தின் 58வது படைப்பிரிவினர் விடுதலைப்புலிகளுக்கு எதிராக கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு முழங்காவில் பகுதியை கைப்பற்றியதுடன் அந்த பகுதியில் இருந்த சிறிய முகாம்கள் மற்றும் விடுதலைப்புலிகளின் 5 ஆயிரம் உறுப்பினர்களின் மாவீரர் துயிலும் இல்லம் ஒன்றையும் கண்டுபிடித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


கச்சிக்குடா கடற்புலி முகாமின் பலத்தை முற்றாக அழித்துள்ளதாகவும் சரத் பொன்சேக்கா குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் கல்விளான் பிரதேசத்தின் மத்தியில் விடுதலைப்புலிகள் அமைத்திருந்த பதுங்குகுழிகளையும், மோட்டார்கள் அடங்கிய முகாம் பகுதி ஒன்றையும் 57வது படைப்பிரிவின் 572வது பிரிவினர் கைப்ப்றறியதாகவும் மோதல்கள் சுமார் 6 மணிநேரம் நடைபெற்றதாகவும் பொன்சேக்கா கூறியுள்ளார்.

வன்னி மோதல்களில் 15 விடுதலைப்புலிகளும், 4 படையினரும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த அறிவிப்புக் குறித்து புலிகள் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகவில்லை.

No comments: