Thursday, 14 August 2008

மோதல்கள் இடம்பெறும் பகுதியிலுள்ள மக்களின் நலன்களை இராணுவ ரீதியாக நிறைவேற்ற முடியாது- தேசிய சமாதானப் பேரவை

விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்கத்துக்கும் இடையில் வடபகுதியில் மோதல்கள் இடம்பெற்றுவரும் நிலையில், மக்களின் நலன்களை இராணுவ ரீதியாக நிறைவேற்ற முடியாது என தேசிய சமாதானப் பேரவை தெரிவித்துள்ளது.

இரு தரப்புக்கும் இடையில் தொடர்ந்துவரும் மோதல்களால் இலட்சக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும், அவர்களின் தேவைகளை இராணுவ ரீதியான நடவடிக்கைகள் மூலம் தீர்த்துவைக்க முடியாதெனவும் சமாதானப் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வடபகுதியிலுள்ள மக்களின் பாதுகாப்பை இரண்டு தரப்பினரும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும், இடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்கான மனிதநேய உதவிகளை முன்னெடுப்பதற்கு ஐ.நா. நிறுவனங்களுக்கும், அரசசார்பற்ற நிறுவனங்களுக்கும் இலங்கை அரசாங்கம் தடைகளை ஏற்படுத்தக்கூடாதெனவும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் கோரிக்கை விடுத்திருந்தார்.

மன்னார் ஆயரின் கோரிக்கையுடன் தாமும் உடன்படுவதாகத் தெரிவித்திருக்கும் தேசிய சமாதானப் பேரவை, ஆயரின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளது. மக்கள் ஒருபோதும் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்படக் கூடாது எனவும், பொதுமக்கள் செறிந்துவாழும் பகுதிகளில் வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களை நடத்தவேண்டாம் எனவும் தேசிய சமாதானப் பேரவை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனங்கள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து மனிதநேய நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், ஒரு இடத்திலிருந்து பொதுமக்கள் வெளியேற விரும்பினால் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்துக்கு அமைய அவர்களை சுதந்திரமான வெளியேற விடுதலைப் புலிகளும், இலங்கை அரசாங்கமும் அனுமதிக்க வேண்டும் எனவும் சமாதானப் பேரவை தெரிவித்துள்ளது. மோதல்களில் ஈடுபட்டிருக்கும் இரண்டு தரப்பினரும் ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளூரில் இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பான சட்டங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் தேசிய சமாதானப் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, வடபோர் முனைகளில் தொடரும் தாக்குதல்களால் இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்திருப்பதுடன், பலர் தொடர்ந்தும் இடம்பெயர்ந்த வண்ணம் இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: