ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் 2009ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தை இந்த மாதம் நடுப்பகுதியில் தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கமைய அனைத்து அமைச்சர்களிடமிருந்தும் ஆலோசனைகள் பெறப்பட்டு இம்மாத நடுப்பகுதியில் வரவு-செலவுத்திட்டம் தயாரிக்கப்படவிருப்பதுடன், ஒக்டோபர் 9ஆம் திகதி வரவு-செலவுத்திட்டம் தொடர்பான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் எனவும் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூறினார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி ஜனாதிபதியால் வரவு-செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு நவம்பர் 7ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை விவாதம் நடைபெறும் எனவும், அதனைத் தொடர்ந்தும் நவம்பர் 15ஆம் திகதி வரவு-செலவுத்திட்டம் தொடர்பான முதற்கட்ட வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 17ஆம் திகதியிலிருந்து டிசம்பர் 8ஆம் திகதிவரை நடத்தப்பட்டு வாக்கெடுப்பு இடம்பெறும் எனத் தெரிவித்த அமைச்சர், இந்தத் திகதிகள் உத்தேசத் திகதிகளேயெனவும், திகதிகளில் மாற்றங்கள் ஏற்படலாமெனவும் கூறியுள்ளார்.
2008ஆம் ஆண்டு வரவு-செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் கடும் போட்டிக்கு மத்தியிலேயே வெற்றிபெற்றிருந்தது. வரவு-செலவுத்திட்டம் சர்ப்பிக்கப்பட்ட காலப் பகுதியில் ஆளும் கட்சியிலிருந்து எதிர்க்கட்சிக்கும், எதிர்க்கட்சியிலிருந்து ஆளும் கட்சிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தாவியிருந்தனர். இதனால் ஒரு ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டிருந்தது.
2008ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட வாக்கெடுப்பில் ஜே.வி.பி.யினர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் விட்டதால் அரசாங்கத்துக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்திருந்ததாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்துவெளியிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment