Friday, 8 August 2008

முகாம்களை விட்டு வெளியே செல்லமுடியாத நிலையில் நானாட்டான் பகுதி மக்கள்- முகாம்களுக்கு விஜயம் மேற்கொண்ட ஊடகவியலாளர்கள் தகவல்

கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களைத் தொடர்ந்து இடம்பெயர்ந்து மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பகுதியிலுள்ள முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள் முகாம்களை விட்டு வெளியேறமுடியாத நிலையில் இருப்பதாக மன்னார் தகவல் தொடர்பாடல் ஊடக வலைப்பின்னல் நிலையம் தெரிவித்துள்ளது.

மக்களைத் தேடிய ஊடகப் பயணம் இரண்டாம் கட்டத்தின் ஒரு அங்கமாக மன்னார் தகவல் தொடர்பாடல் ஊடக வலைப்பின்னல் நிலையத்தின் ஏற்பாட்டில் மன்னார் பகுதி ஊடகவியலாளர்கள் நானாட்டான் பிரதேச செயலாளர் பகுதியிலுள்ள முகாம்களுக்குச் சென்று அங்குள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள் முகாம்களை விட்டு வெளியேறுவதாயின் இராணுவத்தினர் ஆளடையாள அட்டைகளைப் பெற்றுக்கொண்ட பின்னரே அனுமதிப்பார்கள் எனவும், அவ்வாறு அடையாள அட்டை இன்றி வெளியில் செல்லும்போது சோதனைச் சாவடியொன்றில் மறிக்கும் இராணுவத்தினர் அடையாள அட்டையின்றி அப்பால் செல்ல அனுமதிப்பதில்லையெனவும் முகாம்களிலிருக்கும் மக்கள் கவலை தெரிவித்ததாக அந்த மன்னார் ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அவசர தேவைகள் மற்றும் வைத்தியசாலைகளுக்குக் கூடசெல்லமுடியாத நிலையில் முகாம் மக்கள் இருப்பதாக மன்னார் தகவல் தொடர்பாடல் ஊடக வலைப்பின்னல் நிலையம் கூறுகிறது.

முகாம்களில் தங்கியிருப்பவர்களில் பெரும்பாலான பாடசாலை மாணவர்கள் இருப்பதுடன், தற்பொழுது நடைபெற்றுவரும் க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களும் முகாம்களில் இருப்பதாகத் தெரியவருகிறது. இவர்கள் படிப்பதற்கு ஏற்ற அடிப்படை வசதிகளோ மின்சாரமே இல்லையெனவும், அவ்வாறான மாணவர்கள் வெளியிலிருக்கும் நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று படிப்பதற்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருப்பவர்களால் அனுமதி வழங்கப்படுவதில்லையெனவும் ஊடகவியலாளர்களிடம் முகாம்களிலிருக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

மக்களை நோக்கிய ஊடகப் பயணத்தில் 250 குடும்பங்கள் வரை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்துகொண்டதாக மன்னார் தகவல் தொடர்பாடல் ஊடக வலைப்பின்னல் நிலையம் கூறுகிறது. மக்களைச் சந்திக்கும் இந்த நிகழ்வுக்கு மன்னார் சேவாலங்கா அமைப்பு உதவி வழங்கியதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், நானான்டான் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளிலுள்ள முகாம்களில் தங்கியிருப்பவர்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படாததால் அங்குள்ள மக்கள் வருமானம் இன்றி இருப்பதுடன், முகாம்களில் வழங்கப்படும் உலர் உணவுப் பொருள்கள் போதியளவில் இல்லையெனவும் முகாம்களுக்கு விஜயம் செய்த ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். முகாம்களில் இருப்பவர்களுக்குத் தற்பொழுது மா மாத்திரமே வழங்கப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.

இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருக்கும் தம்மை மீளக்குடியமர்த்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தள்ளாடி இராணுவ முகாம் தளபதி ஆகியோருக்கு மகஜர்களைக் கையளித்திருந்தபோதும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென முகாம்களிலிருக்கும் மக்கள் தம்மிடம் தெரிவித்ததாக அங்கு சென்றிருந்த ஊடகவியலாளர்கள் கூறினர்.

No comments: