Friday, 8 August 2008

ஊடகங்களுக்கு எதிரான அமைச்சர் மேர்வின் சில்வாவின் நடவடிக்கை வெட்கத்துக்குரியது- அநுர பிரியதர்ஷன யாப்பா

ஊடகங்களுக்கு எதிராக மேர்வின் சில்வா நடந்துகொள்ளும் முறையானது தமக்கு மிகுந்த வேதனையைத் தருவதுடன், வெட்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகஇன்று வியாழக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அமைச்சர் மேர்வின் சில்வாவின் ஊடகங்களுக்கு எதிரான மோசமான செயற்பாடு இதுவே இறுதியானதாக இருக்கவேண்டும் எனவும், இனிமேலும் இவ்வாறான சம்பவங்கள் தொடர இடமளிக்கப் போவதில்லையெனவும் ஊடகத்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.

புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் களனிப் பாலத்தைத் திறக்கும் நிகழ்வுக்கு வருமாறு ஊடகத்துறை அமைச்சு விடுத்த அழைப்பை ஏற்றே சிரச தொலைக்காட்சியின் படப்பிடிப்பாளர்கள் அங்கு சென்றிருந்ததாகக் குறிப்பிட்ட அமைச்சர், அவ்வாறு படம்பிடிக்கச் சென்ற ஊடகவியலாளர் தாக்கப்பட்டிருப்பதானது தமது அமைச்சுக்கே அவப்பெயரை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறினார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தாம் வருந்துவதுடன், தமக்குக் கவலையை ஏற்படுத்தியிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சிறிய தப்புச் செய்யும் சாதாரண ஒருவரைக் கூட பொலிஸார் கைதுசெய்து அடைத்துவைக்கும் நிலையில், பகிரங்கமாக ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தும், கமராக்களைப் பறிக்கும் அமைச்சருக்கு எதிராக அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது எனவும், இவ்வாறு நடந்துகொள்வதற்கு அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு சிறப்பு அதிகாரங்கள் ஏதும் வழங்கப்பட்டுள்ளதா எனவும் ஊடகவியலாளர்கள் ஊடகத்துறை அமைச்சரிடம் கேள்வியெழுப்பியிருந்தனர்.

இதற்குப் பதிலளித்த ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு அவ்வாறு எந்த சிறப்பு அதிகாரங்களும் வழங்கப்படவில்லையெனவும், ஊடகவியலாளர்கள் மீதான அமைச்சரின் தாக்குதல் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதில் தனது நிலைப்பாட்டை ஊடகவியலாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் கூறியிருந்தார். இவ்வாறான சம்வங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அமைச்சர் மேர்வின் சில்வாவும், அவரின் ஆதரவாளர்களும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்குச் சொந்தமான வீடியோ கமராக்களைப் பறித்துப் படப்பிடிப்பாளரைத் தாக்கிய சம்பவத்தைக் கண்டித்து ஐந்து ஊடக அமைப்புக்கள் மற்றும் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்கும் அமைப்பு என்பன இணைந்து நாளை நண்பகல் கொள்ளுப்பிட்டி சந்தியில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளன.

No comments: