தென்பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்துக்குச் செல்வதற்கான தரைவழிப் பாதையொன்றை ஏற்படுத்துவதே, வடபகுதியை மீட்பதற்கான அரசாங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றென தேசிய பாதுகாப்பு பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியிருப்பதாக இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் பூநகரி விரைவில் மீட்கப்பட்டு, தென்பகுதியையும், யாழ் குடாநாட்டையும் இணைக்கும் ஏ-32 தரைவழிப் பாதை மக்களுக்காகத் திறந்துவிடப்படும் என அமைச்சர் கூறியிருப்பதாக அந்த இணையத்தளம் தெரிவிக்கிறது.
“வடமேல் பகுதியில் விடுதலைப் புலிகளின் பாரிய கடற்புலி முகாமாக விளங்கிய விடத்தல்தீவு கைப்பற்றப்பட்டது அனைவருக்கும் தெரியும். ஏ-32 வீதியிலிருக்கும் பூநகரியைக் கைப்பற்ற நாங்கள் முயற்சிக்கின்றோம். யாழ் குடாநாட்டின் நாவற்குழி மற்றும் காரைதீவு ஊடாக பூநகரிவரை படகுசேவையை ஏற்படுத்தினால் தென்பகுதியிலிருந்து மக்கள் தரைவழியாக யாழ் குடாநாடு செல்லமுடியும். அதேநேரம், இந்தியாவிலிருந்து விடுதலைப் புலிகளுக்குக் கிடைக்கும் உதவிகள் முற்றாகத் தடுக்கப்பட்டுள்ளன” என அமைச்சர் அந்த இணையத்துக்குத் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாமையாலேயே ஏ-9 வீதியை மூடவேண்டியநிலை ஏற்பட்டதாகக் குறிப்பிட்டிருக்கும் அமைச்சர், இதனால் யாழ் குடாநாட்டுக்கும், தென்பகுதிக்கும் இடையிலான தரைவழித் தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
ஆயுதங்களைக் கைவிடமறுத்து தமிழ் மக்களை மிகவும் கஷ்டங்களுக்குள் வைத்திருக்கும் பிரபாகரனும், அவருடன் இணைந்தவர்களும் முதலைக்கண்ணீர் வடிக்கிறார்கள் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல குற்றஞ்சாட்டியிருப்பதாக அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.
வன்னியைக் கைப்பற்றும் இராணுவ நடவடிக்கைகள் தொடரும்- இராணுவப் பேச்சாளர்
வன்னியைக் கைப்பற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்ட இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார, மணலாறு பகுதியில் மோதல்களில் ஈடுபட்டிருக்கும் 59ஆம் படைப்பிரிவு, வன்னியின் தென்பகுதியை நோக்கி முன்னேறி வருவகின்றது எனக் கூறினார்.
மன்னார் ஆண்டான்குளம் கிழக்குப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் நேற்றுக் காலை முதல் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருவதாக உதய நாணயகார தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment