வடக்கில் அதிகரித்துவரும் மோதல்கள் காரணமாக யாழ் குடாநாட்டில் பொருள்களின் விலைகள் திடீரென அதிகரித்துள்ளன. தனியார் வர்த்தகர்கள் பலர் பொருள் பதுக்கலில் ஈடுபட்டிருப்பதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.
வடபகுதியில் உக்கிரமடைந்திருக்கும் மோதல்களால் தனியார் வத்தகர்கள் பொருள் பதுக்கலில் ஈடுபட்டிருப்பதால், சாதாரணமாக ஒரு கிலோ அரிசி 90 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்படுவதாகவும், தரமான அரிசி ஒரு கிலோ 120 ரூபா முதல் 140 ரூபாவரை விற்பனை செய்யப்படுவதாகவும் யாழ் தகவல்கள் கூறுகின்றன. ஒரு கிலோ கோதுமைமா 95 ரூபாவுக்கும், ஒரு கிலோ சீனி 85 ரூபா முதல் 90 ரூபாவரை விற்பனை செய்யப்படுவதாகவும் பிராந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கூட்டுறவுச் சங்கங்களில் பங்கீட்டு அட்டைக்கு மாத்திரம் ஆகக் கூடியது இரண்டு கிலோ அரிசி, மா, சீனி வழங்கப்படுவதாகவும், தனியார் வர்த்தகர்கள் பொருள்களைப் பதுக்கியிருப்பதுடன், பொருள்களை பலமடங்கு விலைகூட்டி விற்பனை செய்வதாகவும் யாழ் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
ஒரு பக்கற் சீமெந்தை 1,600 ரூபா கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்யுமாறு யாழ் அரசாங்க அதிபர் அறிவித்துள்ள போதிலும், ஒரு பக்கற் சீமெந்து 2,000 ரூபா முதல் 3,000 ரூபாவரை விற்பனை செய்யப்படுகிறது. 1,600 ரூபாவே சிட்டையில் பதியப்பட்டாலும், வாடிக்கையாளரிடமிருந்து, வர்த்தகர்கள் 2,000 ரூபாவுக்குக் குறையதா பணத்தைப் பெற்றுக்கொள்வதாக யாழ் பிராந்தியத் தகவல்கள் கூறுகின்றன.
யாழ் குடாநாட்டில் கடல்தொழிலுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு பொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டிருப்பதால் கரையோரப் பகுதியைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.
யாழ் குடாநாட்டில் அதிகரித்திருக்கும் சிசுக்கொலைகள்
பொருள்களின் விலைகள் அதிகரித்திருக்கும் இதேவேளை, யாழ்ப்பாணத்தில் பிறந்த சிசுக்களைக் கொல்லும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. இம்மாதத்துக்குள் இவ்வாறான இரண்டு சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம் கன்னியர்மடம் வீதிக்கும், ஆச்சிரமம் வீதிக்கும் அண்மித்த பகுதியில் அமைந்திருக்கும் கழிவுநீர் மதகு ஒன்றின் கீழிலிருந்து அழுகிய நிலையில் பிறந்து ஒருநாளேயான பெண் சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பழைய துணிகளால் சுத்தப்பட்டு பொலித்தீன் பையொன்றில் போடப்பட்டு அழுகிய நிலையில் இந்தச் சிசுவின் சடலம் இன்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளது. துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் கிராமசேவகர் ஊடாகப் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இந்தச் சிசுவின் சடலம் தற்பொழுது யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருப்பதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேபோன்றதொரு சம்பவம் இம்மாதம் முதலாம் திகதி பன்றிக்கோட்டுப் பிள்ளையார் கோவில் பகுதியிலும் இடம்பெற்றுள்ளது. பிறந்து ஒருநாளேயான குழந்தையைப் பெற்றவர்கள் போட்டுவிட்டு ஓடிவிட்டதாகவும், குழந்தை அழும் சத்தம் கேட்ட பிரதேச மக்கள் குழந்தையை வைத்தியசாலையில் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது.

No comments:
Post a Comment