கடலுக்கடியிலான இணைப்பு மூலம் மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ளும் திட்டத்தின் மூலம் இலங்கை இந்தியாவிடம் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சரணடையவுள்ளதாக ஜே.வி.பி குற்றம்சாட்டியுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் இலங்கையின் சக்திவளத்துறையில் இந்தியாவின் கைமேலாங்கிவிடும் எனவும் ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்கவே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்தத் திட்டம் நிறைவேற்றப்படுவதைத் தடுப்பதற்கு அனைவரும் முயற்சிக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் ஒப்பந்தக்காரர் தமிழ் நாட்டின் மதுரையைச் சேர்ந்தவர் என்பதால் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளுக்கு உதவியளிக்கக் கூடும் எனவும், தென்னிந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் இந்தப் பணியில் அமர்த்தப்படுவதன் காரணமாக முழு நாட்டிற்குமே அச்சுறுத்தல் ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மன்னார் கடற்பரப்பினூடாக இந்தத் திட்டத்திற்கான மின்இணைப்பு செல்வதன்காரணமாக, இலங்கையின் எண்ணெய் அகழ்வுப் பணிகளுக்குப் பாதிப்பு ஏற்படும் எனவும் பிமல் ரத்னாயக்க எச்சரித்துள்ளார்.
இந்தத் திட்டமானது இலங்கையின் சூழலுக்கும் பாரிய தாக்கத்தை விளைவிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் கைச்சாத்திடப்படவுள்ள பொருளாதார பங்குடமை ஒப்பந்தத்தை தாம் எதிர்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, மற்றும் தேசிய சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment