Friday, 8 August 2008

கிழக்கை மீட்டதாக அரசு கூறினாலும் தமிழ் மக்களுக்கு இராணுவகெடுபிடியும் புதைகுழிகளுமே விமோசனம் - தங்கேஸ்வரி எம்.பி. கவலை!

கிழக்கு மாகாணத்தை மீட்டு விட்டதாக அரசு கூறிவரும் நிலையில், அங்குள்ள தமிழ் மக்களுக்கு இராணுவ கெடுபிடிகளும் மனிதப்புதைகுழிகளுமே விமோசனமாக கிடைப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் கே.தங்கேஸ்வரி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்டநீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

இந்த அவசரகாலச் சட்டம் என்பது பொதுமக்களின் பாதுகாப்பு என்ற போர்வையில் மாதாந்தம் நிறைவேற்றப்படுகின்றது. ஆனால், இந்த சட்டத்தினால் தமிழ் மக்கள் பெரும் அவலங்களையும் சித்திரவதைகளையும் அனுபவித்து வருகின்றனர்.

அவசரகால சட்டத்தினால் தமிழ் மக்கள் விசாரணை என்ற பேரில் எந்த விசாரணைகளுமின்றி நேரகாலமின்றி கைது செய்யப்படுவதுடன், வெள்ளை வான்களிலும் கடத்தப்படுகின்றனர்.

இன்று கிளிநொச்சியில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மரங்களின் கீழும் காடுகளிலும் உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி தவிக்கின்றனர். இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்ற வேண்டிய மாணவர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.

இதேவேளை, 10 நாட்களுக்குள் 16 பேர் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டுள்ளனர். 50 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழர் வாழும் பகுதிகளிலேயே வெள்ளைவான் கடத்தல்கள் இடம்பெற்று வருகின்றன.

வெள்ளைவான் கடத்தல்கள், கைதுகள், சிறையிலடைப்புகள், சித்திரவதைகள் என தமிழர்கள் கொடூரங்களை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் கிழக்கில் எமக்கு மனித புதைகுழிகளே கிடைக்கின்றன. வீதிச் சோதனைகள், அடிக்கொரு இராணுவ முகாம் என அப்பட்டமான மனித உரிமை மீறல்கள்.

பாலமீன்மடு அகதிமுகாம் ஒன்றின் அருகே புதைகுழியிலிருந்து 20 எலும்புக்கூடுகள் வரை மீட்கப்பட்டுள்ளன. இவை அண்மைக் காலத்தில் புதைக்கப்பட்டவையாகவேயுள்ளன என்றார்.


No comments: