Friday, 8 August 2008

உதவிப் பொருள்களின் பற்றாக்குறையால் வடபகுதியில் இடம்பெயர்ந்திருக்கும் மக்கள் ஆபத்தில்- யூ.என்.எச்.சீ.ஆர்.

அவசர உதவிப் பொருள்கள் குறைவடைந்துவருவதால் இலங்கையின் வடபகுதியில் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்கள் உணவுப் பற்றாக்குறைக்கு முகம்கொடுக்கும் அச்சம் தோன்றியிருப்பதாக யூ.என்.எச்.சீ.ஆர். தெரிவித்துள்ளது.

இடம்பெயர்ந்தவர்களுக்கான, உணவு, நீர், சுகாதார வசதிகள், தற்காலிக தங்குமிடங்கள் மற்றும் எரிபொருள்கள் போன்றவற்றை விநியோகிப்பதற்கான போதியளவு இருப்பு இல்லையென யூ.என்.எச்.சீ.ஆர். அமைப்பின் பேச்சாளர் ரோன் ரெட்மன் கூறியுள்ளார்.

“உணவுப் பொருள்களை இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளுக்கு எடுத்துச்செல்வதில் காணப்படும் கட்டுப்பாடுகளால் குறைந்தளவு பொருள்களே எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் மனித நேய அமைப்புக்கள் குறைந்தளவு பொருள்களையே மக்களுக்கு வழங்கவேண்டிய தேவை உள்ளது” என அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஜுலை மாதம் மாத்திரம் 12 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 60 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்திருப்பதாக யூ.என்.எச்.சீ.ஆர். அமைப்பு கணித்துள்ளது. மனித நேயப் பணியாளர்களின் பாதுகாப்பை இந்தப் பகுதியில் உறுதிப்படுத்தமுடியாதுள்ளதால் மனித நேயப் பணிகளை முன்னெடுக்க மிகவும் மோசமான பகுதியென ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

எனினும்;, வன்னிப் பகுதியில் இடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை அனுப்பிவைத்திருப்பதாக இராணுவம் அண்மையில் அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments: