Friday, 8 August 2008

விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகள் குறித்து பிரான்ஸ் அரசாங்கம் மகிழ்ச்சி- பாலித கொஹண

மூதூரில் படுகொலை செய்யப்பட்ட அக்ஷன் பேம் பணியாளர்கள் 17 பேரினதும் கொலைகள் குறித்த விசாணை ஆணைக்குழுவின் விசாரணைகள் தொடர்பாக பிரான்ஸ் மகிழ்ச்சியடைவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹண கூறியுள்ளார்.

“பிரான்ஸ் அரசாங்கம் எம்முடன் தொடர்பிலேயே உள்ளது, இதுவரை விசாரணை ஆணைக்குழுவால் நடத்தப்பட்ட விசாரணைகள் பற்றி அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்” என பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற கருத்தரங்கொன்றில் கொஹண தெரிவித்தார்.

கிழக்கு மற்றும் ஆசிய பிராந்தியங்களிலுள்ள சில நாடுகள் அக்ஷன் பேம் பணியாளர்களின் கொலை பற்றிய விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகளுக்குத் தொடர்ந்தும் ஆதரவு வழங்கிவருவதுடன், சில நாடுகள் விசாரணைகள் குறித்து திருப்தியடையவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, பணியாளர்களின் படுகொலை தொடர்பான விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தருணத்தில் ஏன் அக்ஷன் பேம் நிறுவனம் நாட்டைவிட்டு வெளியேறியது என்பதை அவர்கள் விளக்கவேண்டியுள்ளது என இராணுவத்தின் சட்டத்தரணி கொமின் தயாசிறி கூறினார். விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது அவர்கள் வெளியேறியிருப்பது ஏற்றுக்கொள்ளமுடியாதது எனத் தெரிவித்தார்.

“கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் பலர் சாட்சியமளித்துள்ளனர். அக்ஷன் பேம் நிறுவனம் தமது பணியாளர்களைத் தொடர்ந்தும் மூதூரில் தங்கியிருக்குமாறு பணிப்புரை வழங்கியதாக சாட்சியமளிந்த குடும்ப உறுப்பினர்களில் பலர் குற்றஞ்சாட்டியிருந்தனர். அனைவரும்; வெளியேறும் நிலையில் அக்ஷன் பேம் பணியாளர்கள் மாத்திரம் தங்கியிருந்தமையே அவர்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது” என கொமின் தயாசிரி குறிப்பிட்டார்.

பிரான்ஸைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் அக்ஷன் பேம் நிறுவனம் தனது பணியாளர்களின் பாதுகாப்புத் தொடர்பாக கவனயீனமாக இருந்துவிட்டதாலேயே இந்தப் படுகொலைகள் இடம்பெற்றதாகச் சுட்டிக்காட்டிய இராணுவத்தினரின் சட்டத்தரணி, தமது பணியாளர்களைத் தொடர்ந்தும்; தங்கியிருக்குமாறு கோரிக்கை விடுத்ததை அக்ஷன் பேம் நிறுவனம் ஏற்றுக்கொண்டதாகவும்; அவர் கூறியிருந்தார்.

இதேவேளை, அக்ஷன் பேம் நிறுவனப் பணியாளர்களின் படுகொலைகள் குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்கு பிரான்ஸ் நாட்டின் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஒருவர் இலங்கை வந்துள்ளார். கடந்த ஜுலை மாத ஆரம்பத்தில் இலங்;கை வந்த அவர், அக்ஷன் பேம் நிறுவனப் பணியாளர்களின் படுகொலைகள் தொடர்பான தரவுகளைத் திரட்டிவருவதாக அக்ஷன் பேம் நிறுவனம் அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments: