Monday, 11 August 2008

தீர்வை நோக்கிய அரசாங்கத்தின் முப்பரிமாணத்திட்ட அணுகுமுறை- அமைச்சர் சம்பிக்க ரணவக்க

இலங்கையின் இனப்பிரச்சினையை முப்பரிமாணத் திட்ட அணுகுமுறையின் ஊடாகத் தீர்ப்பதற்கே இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக சுற்றாடல் வளத்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஜனநாயகப் படுத்தல், அபிவிருத்தி, படைவலுவைக் குறைத்தல் போன்ற முப்பரிமாணத் திட்ட அணுகுமுறையின் ஊடாகவே இனப்பிரச்சினையைத் தீர்க்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், அரசியல் ரீதியான தீர்வு என்பது பழைமை வாய்ந்த முறை எனவும் அவர் கூறியுள்ளார். வெளிநாட்டுத் தூதரக அலுவலகங்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள், சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் மேலைத்தேய நாடுகளிலேயே அரசியல் ரீதியான தீர்வு என்ற பதம் தற்பொழுதும் பாவனையில் இருப்பதாக கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கியிருக்கும் பிரத்தியேக செவ்வியில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அரசாங்கத்தின் இந்த அணுகுமுறை கிழக்கு மாகாணத்தில் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், கிழக்கு மாகாணத்தை இராணுவ ரீதியாக வென்றுள்ள அரசாங்கம், அங்கு முன்னாள் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர் ஒருவரை முதலமைச்சராக நியமித்து ஜனநாயகத்தை நிலைநாட்டியுள்ளது எனக் கூறினார். அத்துடன், கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காகவும், மக்களின் நன்மைக்காகவும் உட்கட்டுமான வசதிகள் புனரமைக்கப்பட்டு வருவதாகவும், கிழக்கு மாகாணத்தை, அரசாங்கம் வளர்ச்சிப் படியின் இயந்திரமாகக் கொண்டுள்ளது எனவும் சுற்றாடல் வளத்துறை அமைச்சர் கூறினார்.

“இவ்வாறே, அரசாங்கத்தின் முப்பரிமாணத் திட்ட அணுகுமுறையின் மூலம் இனப்பிரச்சினையைத் தீர்க்கவேண்டும் என நாங்கள் கூறுகின்றோம். இந்த அணுகுமுறை மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழீழக் கனவோ அல்லது முஸ்லிம்களின் கனவோ நிறைவேறாது. இதனால்தான், இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு பொருத்தமற்றது என நாங்கள் கூறுகின்றோம்” எனத் தனது செவ்வியில் அமைச்சர் தெரிவித்தார்.

சிங்கள மக்களின் உரிமைகளுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என்ற எந்த அழுத்தங்களுக்கும் அரசாங்கம் உள்ளாகவில்லையெனத் தெரிவித்த சம்பிக்க ரணவக்க, மோதல்கள் இடம்பெறும்போது வன்முறைகள் இடம்பெறுவது சகஜமானது எனவும் கூறியுள்ளார்.

“குவான்டனாமோ அல்லது பக்தாத்தில் அமெரிக்க அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் வன்முறைகள் குறித்து என்ன கூறுகிறீர்கள்? ஆப்கானிஸ்தானிலுள்ள மக்களின் உரிமைகளுக்கு என்ன கூறுகிறீர்கள்? காபூலிலுள்ள ஒருவருக்கும், வொஷிங்டனிலுள்ள ஒருவருக்கும் இடையில் என்ன வித்தியாசம்? இந்த மேலைத்தேய நாடுகள் எமது விடயங்களில் இன்னமும் உரிமை இருக்கிறது என நினைத்துக்கொண்டிருக்கின்றன. காலனித்துவப் பகுதியைவிட்டு அவர்கள் அப்பால் செல்லவில்லை. ஆசியாவுக்கே தற்பொழுது சிறந்த காலம் என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும். மனித உரிமை மீறல்கள் தனிப்பட்ட ரீதியாகவே இடம்பெறுகின்றன, இது அரசாங்கத்தின் கொள்கையல்ல” என அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறினார்.

மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டால் அரசைவிட்டு வெளியேறுவோம்

13வது திருத்தச்சட்டமூலத்தை முழுமையாக அமுல்படுத்தி அதன் ஊடாக மாகாணசபைகளுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளித்தால் அரசாங்கத்தைவிட்டு, ஜாதிக ஹெல உறுமய வெளியேறிவிடும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தனது செவ்வியில் தெரிவித்துள்ளார்.

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கும் சிலர் தமது சொந்த யோசனைகளை உள்ளடக்கிய தீர்வுத்திட்டத்தை வெளியிடுவதற்கு முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டிய அமைச்சர், 13வது திருத்தச்சட்டமூலத்தை சட்டத்தின் ஒரு பகுதியாகவே அமுல்படுத்த தாம் இணங்கியிருப்பதாகவும் கூறினார்.

13வது திருத்தச்சட்டமூலத்தை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்தாது எனத் தாம் நம்புவதாகவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க அந்த ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் மேலும் தெரிவித்தார்.

No comments: