உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைவடைந்துள்ள நிலையில் இலங்கையிலும் எரிபொருளின் விலைகளைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கும்போது எரிபொருள் விலைகளை அதிகரிக்கும் இலங்கை அரசாங்கம், விலை குறையும்போது விலைகளைக் குறைப்பதில்லையென இன்று திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூறினார். எரிபொருள்களின் விலைகளைக் குறைக்காமல் அரசாங்கம் திட்டமிட்டு மக்களிடம் கொள்ளையடிப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
சார்க்கால் இலங்கைக்கு ஒரு ரூபா கூட இலாபம் இல்லை
ஆடம்பரமாக நடைபெற்று முடிவடைந்திருக்கும் 15வது சார்க் உச்சிமாநாட்டுக்கு 5900 மில்லியன் இந்திய ரூபாய்கள் செலவுசெய்யப்பட்டுள்ளபோதும், அதனால் இலங்கைக்கு ஒரு ரூபாய் கூட இலாபம் கிடைக்கவில்லையென ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
“பயங்கரவாத ஒழிப்புத் தொடர்பாக சார்க் நாட்டில் முக்கியம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. எனினும், இலங்கையில் இடம்பெறும் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ஏனைய நாட்டுத் தலைவர்கள் எவரும் கருத்துத் தெரிவிக்கவில்லை. இலங்கையில் இடம்பெறும் பயங்கரவாதத்தைக் கண்டித்தோ அல்லது பாராட்டியோ எவரும் பேசவில்லை. இலங்கையில் இடம்பெறும் பயங்கரவாதத்தை ஏனைய நாடுகள் கவனத்தில் கொள்ளவில்லையென்பது இதன் மூலம் புலனாகிறது” என அவர் இன்றைய ஊடகவியலார் மாநாட்டில் கூறினார்.
சார்க்கில் எவ்வாறு மக்கள் பணம் செலவிடப்படுகின்றது என்பதைப் பார்ப்பதற்கே ரணில் சென்றார்
நாட்டின் அடுத்த தலைவர் என்பதால் சார்க் மாநாட்டில் எவ்வாறு மக்கள் பணம் செலவுசெய்யப்படுகிறது என்பதைப் பார்ப்பதற்காகவே தமது தலைவர் ரணில் விக்ரமசிங்க சார்க் உச்சிமாநாட்டுக்குச் சென்றிருந்ததாகவும், சார்க் தலைவர்களை அங்கு சந்திப்பதும் மற்றுமொரு நோக்கமெனவும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.
“சார்க் மாநாடு என்ற பெயரில் மக்கள் பணம் வீணாகச் செலவிடப்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்கவே அடுத்த இலங்கையின் தலைவர் என்பதால் சார்க்கில் இவ்வாறு பணம் செலவுசெய்யப்படுகிறது என்பதைக் கண்காணிக்கவே அவர் சார்க் மாநாட்டுக்குச் சென்றிருந்தார். மக்கள் பணத்தில் நடத்தப்படும் விருந்துசபாரங்கள் எதிலும் அவர் கலந்துகொண்டிருக்கவில்லை” என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் கூறினார்.
இதேவேளை, சிறிலங்கன் எயார் லைன்ஸ் விமான சேவையை இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்று நான்கு மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், அந்நிறுவனத்துக்கு 8100 மில்லியன் ரூபாய்கள் நட்டம் ஏற்பட்டிருப்பதாகவும், மிஹின் எயாரைப் போன்று சிறிலங்கன் எயார் லைன்சும் நட்டத்தத்துக்குள் தள்ளப்பட்டுள்ளதாகவும் ரவி கருணாநாயக்க ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

No comments:
Post a Comment