மன்னார் மடுமாதா தேவாலயத்துக்குச் சென்ற தென்பகுதி பக்தர்களை மதவாச்சி சோதனைச் சாவடிக்கு அப்பால் செல்வதற்கு இராணுவத்தினர் அனுமதிவழங்கவில்லையென கரிட்டாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
மன்னாரில் தற்பொழுது காணப்படும் பாதுகாப்புச் சூழ்நிலையைக் காரணம்காட்டி சுமார் 200 தென்பகுதிப் பக்தர்களை மதவாச்சி சோதனைச்சாவடிக்கு அப்பால் செல்ல இராணுவம் அனுமதிக்கவில்லையென கத்தோலிக்க திருத்தலங்களின் சமூக சேவைகள் அமைப்பான கரிட்டாஸின் பேச்சாளர் அந்தோனிமுத்து கொழும்பு ஊடகமொன்றுக்குக் கூறினார்.
மடுப் பகுதியில் மோசமான பாதுகாப்புச் சூழ்நிலை காணப்படுவதால் பக்தர்களை அனுமதிக்க முடியாதென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவும், ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷவும் தம்மிடம் தெரிவித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மடு தேவாலயத்தின் ஓகஸ்ட் திருவிழா இம்முறை நடைபெறாது என மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் அறிக்கை வெளியிட்டிருந்தபோதும், சமய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் விடுத்த வேண்டுகோளையடுத்தே தென்பகுதி பக்தர்கள் மடுவுக்குச் செல்லத் தீர்மானித்ததாகத் தெரியவருகிறது.
இதேவேளை, மடு தேவாலயத்துக்குச் சென்ற தென்பகுதி பக்தர்கள் மதவாச்சி சோதனைச் சாவடிக்கு அப்பால் செல்ல இராணுவத்தினர் அனுமதிக்காததைத் தொடர்ந்து இராணுவத்தினருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதாகவும், பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த பரல்களை ஆத்திரமுற்ற மக்கள் தட்டிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்தினருக்கும் இடையிலான மோதல்களைத் தொடர்ந்து தேவன்பிட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்த மடு மாதாவின் திருச்சொரூபம், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மன்னார் ஆயர் இல்லத்துக்கு எடுத்துவரப்பட்டதுடன், கடந்த சனிக்கிழமை மடு தேவாலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தது.

No comments:
Post a Comment